05:44:07
Monday
18 June 2018

உலகத் தரவரிசை வீழ்ச்சி தோல்வி அல்ல: ரிட்சுவான் ஷேக் அஹ்மாட்

உலகத் தரவரிசை வீழ்ச்சி தோல்வி அல்ல:  ரிட்சுவான் ஷேக் அஹ்மாட்
கோலாலம்பூர், மார்ச் 20: பீபா எனப்படும் அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசையில் மலேசிய கால்பந்து அணி வீழ்ச்சியை சந்தித்த காரணத்துக்காக எஃப்.ஏ.எம் தலைவர் பதவியில் இருந்து துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் விலக வேண்டியது அவசியமில்லை என மலேசிய கால்பந்து சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ ரிட்சுவான் ஷேக் அஹ்மாட் தெரிவித்துள்ளார். 

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள வேளையில், துங்கு இஸ்மாயில் தேசிய கால்பந்து அணியின் தோல்விக்குத் தம்மை மட்டுமே காரணம் காட்ட முடியாது என ரிட்சுவான் ஷேக் தெரிவித்தார். 

இதுநாள் வரை வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் துங்கு இஸ்மாயில் கடுமையாக உழைத்து வருகிறார். எனவே மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ரிட்சுவான் ஷேக் தெரிவித்தார்.  குறுகிய காலத்தில் தேசிய கால்பந்து அணியின் தரவரிசையை உயர்த்த முடியாது. 

எனவே நீண்ட கால அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டு வர துங்கு இஸ்மாயில் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கடந்த வியாழக்கிழமை எதிர்பாராத திருப்பமாக மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவியை துறப்பதாக ஜோகூர் இளவரசர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் அறிவித்தார்.   

கடந்த ஓராண்டாக இந்தப் பதவியை அவர் வகித்து வந்தார். கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் அவர் இந்தப் பதவியை அலங்கரித்து வந்தார். 211 உறுப்பிய நாடுகளைக் கொண்ட பீபா எனப்படும் உலகக் கால்பந்து சம்மேளனத்தில் மலேசியா பழைய நிலையிலிருந்து கீழிறங்கி 178 ஆவது நிலையை அடைந்ததைத் தொடர்ந்து அதற்குப் பொறுப்பேற்று அவர் தமது பொறுப்பைத் துறந்துள்ளார். 
“இதுவரையில் எனக்கு வழங்கிய ஒத்துழைப்பு அனைத்துக்கும் நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். எனது மனைவிக்கும் குழந்தைக்கும்… தந்தை வீடு திரும்பிவிட்டேன்” என துங்கு மக்கோத்தா சவுத்தர்ன் ஜோகூர் என்ற தலைப்பிலான வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதே பதிவில் மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றதிலிருந்து தாம் வழங்கிய சாதனைகளையும் துங்கு மக்கோத்தா பட்டியலிட்டுள்ளார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.