19:36:59
Tuesday
19 February 2019

வாழ்த்திய வாயும் மறந்த மட நெஞ்சும்

வாழ்த்திய வாயும் மறந்த மட நெஞ்சும்

                                                          கல்விமான், சிந்தனையாளர்  திரு.தொ.க.நாராயணசாமி

முன்னாள் பிரதமர் துன் மகாதிர் திரும்பவும் அரசியல் பிரவேசம் செய்திருக்கும் காரணத்தால் அவர் பற்றிய முரண்பாடான கருத்துகள்  பொது இடங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் நாளிதழ்களிலும் பகிரப்பட்டு வருகின்றன. 
சிலர் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் கண்ணோட்டத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். எதிர்கட்சியானால் ஆதரவாகவும், ஆளும் கட்சி என்றால் பாதகமாகவும் கருத்துகள் பதிவாகி வருகின்றன. இவற்றில், அவர் அரசியல் பிரவேசம் இந்தியர்களுக்கு நல்லதாக இருக்குமா என்பதில் மாறுபட்ட கருத்துகள் உணர்ச்சி பொங்க பகிரப்பட்டு வருகிறது.


மகாதிரின் அரசியல் பின்னணி

The Malay Dilemma மலாய்க்காரர்களின் இரண்டும் கெட்டான் நிலை

மகாதிரின் அரசியல் பின்னணியைப் பகுத்துப் பார்த்தால் அவர், தன் இளைய வயதில் The Malay Dilemma மலாய்க்காரர்களின் இரண்டும் கெட்டான் நிலை எனும் நூலை எழுதி தனது எண்ணங்களை ஆழமாகப் பதித்தவர். மலாய்க்காரர்களின் பார்வையில் அவர் எழுதியவை யதார்த்தமானவை. தொடக்கத்தில் அவருடைய நூலை - அது மிக முரண்பாடாக இருப்பதாகக் கருதிய அரசு - தடை செய்தது. 
அக்காலத்தில், மலாய்க்காரர்கள் மெதுவாக மற்றவர்களுடன் வளரட்டும் - அவசரம் தேவைஇல்லை எனும் உணர்வு துங்கு அப்துல் ரஹ்மான் தலைமயிலான அரசுக்கு இருந்ததால் மகாதிருடைய கருத்து சற்று தீவிரமானதாகக் கருதினார்கள். பின்னர் துன் ரசாக் காலத்தில் தடை நீக்கப்பட்டு, நூல் எல்லாருக்கும் கிடைக்க வகை செய்யப்பட்டது. காரணம், இந்த நூலில் காணப்பட்ட பல நிலைகளைக் கருத்தில் கொண்டே 1969 ஆம் ஆண்டிற்கு பிந்திய புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டுவரப்பட்டது. துங்குவால் அம்னோவிலிருந்து விலக்கப்பட்ட மகாதிர் அம்னோவிற்கு திரும்பிவர அது வழிவகுத்தது. பின்னர் கல்வி அமைச்சர் ஆனார். அதன் பிறகு துன் ஹுசின் ஓன் அவர்களால் துணைப் பிரதமர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். 


பலரையும் வியக்கவைத்தார்
தொடக்கத்திலிருந்தே, தமது கருத்துக்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் பாணி அவரிடிம் இருந்தது. அத்தகைய பண்புதான் அவர் பின்னர் பிரதமர் ஆன சமயம் அவருக்குப் பல இக்கட்டான நிலைகளிலிருந்து மலேசிய அரசின் நலனைக் காக்க உதவியுள்ளது என்பதை மறுக்க முடியாது. அதுவே பல நாட்டுத் தலைவர்களை மிரளவைத்தது என்பதையும் மறக்கலாகாது. அவருடைய காலத்தில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயம், உலக வங்கியிடம் மண்டியிடாமல், தனது சாதுர்யத்தால் நாட்டை நடத்தி பலரையும் வியக்கவைத்தார் என்பது வரலாறு. புத்ரா ஜெயா, லங்காவி, நெடுஞ்சாலைகள், இரட்டைக் கோபுரம், போன்ற பல திட்டங்களின் வழி நாட்டை வளர்ச்சியடைய வைத்தார் என்பதை எல்லாரும் அறிவார்கள். நாட்டை தூரநோக்குச் சிந்தனையுடன் 2020 இலக்கையும் வகுத்தார். 


சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்
அவருடைய  எண்ணம் நாட்டை வளப்படுத்துவதில் முனைப்பாக இருந்ததால், அதற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்று அவர் கருதியவர்களை அவர் கடுமையாகவே நடத்தினார் என்று சொல்லலாம். அரசியல் எதிரிகள் தடுத்து வைக்கப்பட்டனர். ஆளும் அம்னோ கட்சியை வலுப்படுதியிருந்ததால், பாஸ் கட்சி எதிர்கட்சியாக மாறியபோதும் மகாதிர் தான் ஆளுமையை வலுப்படுத்தி நாட்டை வளப்படுத்தினார் - பொருளாதாரத் துறையிலும் கட்டுமானத் துறையிலும் அவர் பல வளர்ச்சிகளின் தந்தையாகவே கருதப்படுகிறார்.
அரசியல் ரீதியில், அம்னோ கட்சி பதிவு ரத்தான சமயம், அம்னோவை மீட்டெடுத்து அவருக்கு எதிராகத் திரும்பிய அம்னோ உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களை அம்நோவிற்கே திரும்பவைத்தார். எல்லாவற்றிலும் ஒரு திடமான நம்பிக்கையுடனும், உரிய திட்டமிடலுடனும் காயை நகர்த்தி அவரை எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.


மகாதீர் கவனம் தவறவிட்ட விடயம் 
ஆனால், அவர் கவனம் செலுத்தாதது, மலேசியாவிலுள்ள பல இன வழி வந்தவர்களுக்கு இடையிலான நல்லுறவையும் ஒற்றுமையையும்தான்.. இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே  தேசிய முன்னணியின் கொள்கை அதற்கு முன் தோன்றிய கூட்டணியின் கோட்பாட்டை அப்படியே கொண்டிருந்ததுதான். தீபகற்ப மலேசியாவைப் பொறுத்தவரை, மூன்று பெரிய இனங்களான மலைய்க்கரர், சீனர், இந்தியர், ஆகியோருக்கு தனித் தனி கட்சிகள் அவரவர் சமூகத்தின் நலனைக் காத்துக்கொள்ளவும், தேர்தல் சமயத்தில் அவரவர்  வாக்காளர்களைக்  கவர்ந்து தேசிய முன்னணிக்கு ஆதரவைப்  பெற்று தருவதும் நடைமுறைக் கொள்கையாக இருந்தது. அம்னோ தலைவர் அல்லது துணைத் தலைவர் மட்டுமே மற்ற சகோதரக் கட்சி மாநாடுகளில் கலப்பார்கள், பேசுவார்கள் . மற்ற அம்னோ தலைவர்கள் கலக்க மாட்டார்கள். மாநில அளவில் மாநில அம்னோ தலைவர் மற்ற சகோதரக் கட்சி மாநில மாநாடுகளில் சில சமயங்களில்க பேச அழைக்கப்படுவர். ஆனால் அம்னோ மாநாடுகளில் சகோதரக் கட்சிகளின் தலைவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே அழைக்கப்படுவர். 
அதைப்போலவே, சீன, இந்திய திருவிழாக்களுக்கு அம்னோ தேசியத் தலைவர் வருவார் - எடுத்துக்காட்டு - தைப்பூசம், சீனப் புத்தாண்டு/  தீபாவளி திறந்த இல்லம்.  அந்தந்த இனம் சார்ந்த கட்சிகளின் தலைவர்களின் ஆளுமை குறையக் கூடாது - அவர்களுடைய இன மக்களின் பிரச்னைகளை அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது இத்தகைய கொள்கையின் உள்ளடக்கம். தேசிய முன்னணி பலமாக இருந்த சமயம் இந்த ஏற்பாடு எல்லாருக்கும் சரியாகவே பட்டது.

இதுவே மலேசிய தேசிய இனம் உருவாவதைத் தடுத்தது 

மகாதிரின் தலைமையில், அம்னோ மலாய்க்கரர்களையும் அவர்களின் பிரச்னைகளையும் கவனித்து பாஸ் கட்சியின் இஸ்லாமிய ஈர்ப்பைச் சமாளிக்கும் வகையில் சமய ஈடுபாட்டை வலுப்படுத்தியது என்று சொல்லலாம். அம்னோ கட்டுக்கோப்பாக 
மலாய்க்காரர்களைக்  கவர்ந்து அவர்கள் மத்தியில் சமய எண்ணங்களை ஆழமாக ஊன்ற வைத்தது இந்தக் காலத்தில் தான். இதன் அடிப்படையில்தான் மற்ற இனங்களும் தங்கள் கலாச்சார வைபவங்களுக்கு முக்கியம் கொடுக்கத் தொடங்கின என்று சொல்லலாம். விளைவுக்கு எதிர் விளைவு இயற்கையாகவே ஏற்ப்பட்டது. இதுவே மலேசிய தேசிய இனம் உருவாவதைத் தடுத்தது என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.


அலி பாபா 

சீனர்கள் தங்கள் பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்ள பல வாய்ப்புகளைக் கேட்டுப் பெற்றுக்கொண்டனர். பல மேம்ப்பாட்டுத் திட்டங்களில் சீனர்கள் ஈடுப்பட்டனர். மலாய்க்கரர்களுக்கு துணைக் குத்தகைகளைக் கொடுத்து சீனர்கள் உதவ வேண்டும் என்பது நனவாகிய காலம் இது. Ali Baba முறை என்று  ஒரு சிலர் ஏளனமாக இதை அழைத்ததை மறக்க முடியாது!. 


வாழ்த்திய வாயும் நினைக்காத மட நெஞ்சும் இந்தியர்களுக்கு ம.இ.கா.,அமைச்சரவையிலும் தனி விண்ணப்பங்களின் வழியும் பிரதமரிடமிருந்து பெற்று தனது இன வளர்ச்சிக்கு செயல்பட்டதாகவே பிரதமராக இருந்த மகாதிர் எண்ணியிருக்க வாய்ப்புண்டு. காரணம், ம.இ.கா. மாநாடுகளில் அவரை அழைத்து, மாலை போட்டு, 'மகாதிர் போல் தலைவர் உண்டா?, அவரை பெற்றது இந்த நாடு செய்த பாக்கியம்! அவர்தான் இந்தியர்களின் பாதுகாவலர்"  போன்ற வாசகங்களைக் கூறி பெருமைப் படுத்தியுள்ளனர். இது வரலாறு! அவர்கள் கேட்டது கிடைக்காமல் இருந்திருந்தால் நிறைய கோரிக்கைகள் விடப்பட்டு, ம.இ.கா.தலைவர் உரையில் உரிய வலியுறுத்தல்கள் இருந்திருக்குமே.
மகாதிர் காலத்தில் இந்தியர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று இன்று சொல்பவர்கள் அன்றும் ம.இ.கா.வில் இருந்தவர்கள்தான்! பழைய ம.இ.கா. மாநாட்டுப் புகைப் படங்களை எடுத்துப் பார்த்தால், குறைந்தது பேராளர்களாக இன்றைய மா.இ.கா. தலைவர்கள் அங்கிருப்பதைக் காணலாம்! என்றாலும் இவர்களைக் குறைக் கூற முடியாது. இவர்களில் பலருக்கு, தேசிய முன்னணியின் செயல் பாங்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.  காரணம் இன்றைய நிலையில் தேசிய முன்னணியின் மூத்த சகோதரருக்கு, சீன வாக்காளர்களும், இந்திய வாக்காளர்களும் தேசிய முன்னணிக்கு ஆதரவு கொடுப்பதில் ஐயம் எழுந்துள்ளது. சீனர்கள் நிறைந்த இடங்களில் எதிர்க்கட்சி வாகை சூடுவது வழக்கமாகியுள்ளது. பொருளாதார பலம் கொண்ட சீனர்களைக் காட்டிலும், இந்நாட்டு இந்தியர்களை சுலபமாக ஈர்க்கலாம் என்பதில் இன்றைய பிரதமரும், அம்னோ தேசியத் தலைவருமான   நஜிபிற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,


இதுவே ம.இ.கா.வின் நிலையை பலவீனப் படுத்தியுள்ளது  இடையில் ஹிண்ட்ராப் இயக்கம் ம.இ.கா.வின் பலவீனத்தைப் படம்பிடித்துக் காட்டியதாக மூத்த நாட்டுத் தலைவர் நஜிப்  எண்ணியதாலும் , ம.இ.கா.வின் ஒற்றுமையின்மையையும் கருத்தில் கொண்டும், அதிருப்தி கொண்ட இந்தியர்கள் சிறு-சிறு கட்சிகளைத் தொடங்கியதும், தாமே களத்தில் இறங்க முற்பட்டதின் விளைவே பிரதமர் துறையில் இந்தியர் மேம்பாட்டிற்க்கான பிரிவு - தனி அலுவலாளர் அமைத்தது. போதாததிற்கு, இந்தியர் சார்ந்த தேசிய முன்னணியை ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அரசு சாரா அமைப்புகளுக்கும் பிரதமரே முன் நின்று நிதி உதவிகளைச் செய்கிறார். இது நஜிப் காலத்தில் காலத்தின் கட்டாயத்தினால் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையே நஜிப் போன்று வேறு எந்த பிரதமரும் இந்தியர்களுக்குச் செய்ததில்லை என்று நம்மவர்களால் போற்றப்ப் படுவதற்கான காரணம். ஆனால், இதுவே ம.இ.கா.வின் நிலையை பலவீனப் படுத்தியுள்ளது என்பதையும் கவனிக்கவேண்டும். என்றாலும், அம்னோ தலைவருக்கு, தேசிய முன்னணி வெல்ல வேண்டும் என்பதே குறிக்கோள் என்பதால், ம.இ.கா.வின் நிலை பற்றிய கவலை அவருக்கு  இருக்க நியாயமில்லை.

மகாதிர் பற்றிய விமர்சனங்கள்

மகாதிர் அரசியலில் மறுபிரவேசம் செய்யாதிருந்தால்  அவரைப் பற்றிய விமர்சனங்கள் இருந்திருக்காது. ஆனால்  அவர் நாட்டைக் 
காக்கப் போகிறேன் என்று சொல்லி எதிர்க்கட்சியான நம்பிக்கை முன்னணிக்குத் தலைமை ஏற்றுள்ளாரே ! அதனால்தான் இப்போதைய விமர்சனம் எல்லாம்.


இந்த வயதில் (92) மகாதிருக்கு இதெல்லாம் தேவையா என்று பலர் கேட்கின்றனர். மகாதிரால் சிந்திக்காமல் இருக்க முடியாது என்பதை அவரை அறிந்தவர்களால் மட்டுமே உணரமுடியும். சிங்கையில் லீ குவான் யூ எப்படி இறக்கும்வரை நாட்டு அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தாரோ அதைப்போலவேதான் மகாதிரும். 22 ஆண்டுகள் நாட்டை வளப்படுத்த தனது அரசில் சாணக்கியத்தைப் பயன்படுத்தி வெற்றியடைந்ததையும், அந்த வளர்ச்சி பின்வரும் தலைவர்களால் தொடர்ந்து நடைபெறவேண்டும் என மகாதிர் விரும்பியதாலேயே அவர் அரசியல் விவகாரங்களில் கருத்து கூறி வந்தார், வருகிறார்.. 

அம்னோ கட்சியிலிருந்தே மகாதிர் வெளியேறினார்அப்துல்லா படாவி தலைமை மிக மந்தமாக செயல்பட்டதாக எண்ணிய மகாதிர், நஜிப் அரியணை ஏற உதவினார் என்றால் அதற்குக் காரணம் அவர் கண்ட 2020 கனவு ஈடேறுவதில் தளர்வு வரக்கூடாது என்று அவர் எண்ணியதால்தான் என்று அவரே கூறுகிறார். 
பின்னர், நஜிப் தலைமைத்துவத்தில் குறைகளைச் சுட்டிக் காட்டினார் - அவருடைய கோணத்திலிருந்து. நஜிப் தனது பாணியில் உறுதியாக இருந்ததால் மகாதிர் தனது அதிருப்தியை பல வகைகளில் வெளிப்படுத்த, இறுதியில் அம்னோ கட்சியிலிருந்தே மகாதிர் வெளியேறினார்.

பரம வைரிகள் நண்பர்கள் வரிசையில் 


நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என அவர் கருதிய பல விசயங்கள் எதிர்கட்சியிலுள்ளவர்கள் கூறியதை ஒத்திருந்ததாலும் தம் பேச்சைக் கேட்காத நஜிப் - அவர் சார்ந்த கட்சியினருக்கும் பாடம் புகட்டும் நோக்கத்தினாலும், எதிர் முன்னணியில் இருக்கிறார். அவருடன் அம்னோவை விட்டு வெளிவந்த முஹ்யுதின் யாசின் போன்றவர்களுடன்  இணைந்து, அம்னோவிற்கு மாற்றாக ப்ரிபுமி கட்சியைத் தொடங்கியுள்ளார். முன்பு தமது பரம வைரியாகக் கருதிய ஜனநாயக செயல் கட்சி, பாஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்த அமானா கட்சி, முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான மக்கள் நீதிக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்துப் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இது அவருடைய அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம். 

காரணம், இந்த முன்னணியில் பெரிய சகோதரர் இல்லை. எல்லா கட்சிகளும் தம்-தம் கொள்கைகளுடனும், கோட்பாடுகளுடனும் சேர்ந்து பணியாற்ற சம்மதித்துள்ளன. இதில் எந்த கட்சி தலைவரும் மற்ற கட்சி தலைவர்களுடன் கலக்காமல் முடிவு எடுக்க முடியாது. இது நாட்டிலுள்ள எல்லா பிரிவினருக்கும், மலேசியர்கள் எனும் ரீதியில் நன்மை பயக்கும் என்பதே இவர்களின் கருத்து. இதில் மகாதிர், அம்னோவில் இருந்தபோது செயல்பட்டதுபோல் செயல்பட முடியாது.

ப்ரிபுமி கட்சி மலாய்க்காரர்களைச் சார்ந்ததுமகாதிர் தலைமை ஏற்றுள்ள ப்ரிபுமி கட்சி மலாய்க்காரர்களைச் சார்ந்தது தான்  உள்ளது . காரணம், மலாய்க்காரர்களைக் கவர, அதுவும் அம்நோவிற்குப் போட்டியாக அவர்களைக் கவர, அதுவும் கிராமப் புற மலாய்க்காரர்களைக் கவர, ஓரினக்  கட்சியால்தான் முடியும், பல்லினக் கட்சியால்  முடியாது  என்பதை மகாதிர்  உணர்ந்துள்ளார். 

மலேசியாவை ஆள மலாய்க்காரர்களின் ஆதரவு இன்றியமையாதது என்பதால், அவர்களைக் கவரும் பொறுப்பு ப்ரிபுமி, அமானா,  கெ  அடிலான், போன்ற கட்சிகளிடம் இருக்கின்றது. இதுகாறும் நகர்ப்புரங்களைக் கவர்ந்த ஜனநாயக செயல் கட்சியும், 
கெ அடிலான் கட்சியும் மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவைத் திரட்டுவது என்றும் பணி பிரிக்கப் பட்டு செயல்படுகிறார்கள். வெற்றி அடைந்தால் யார் பிரதமர் என பலர் ஏளனமாக கேள்வி எழுப்பியதால், பழுத்த அனுபவம் வாய்ந்த மகாதிர் எதிர் கூட்டணியால் முன்மொழியப்ப் பட்டுள்ளார். அன்வார் இப்ராகிம் விடுதலையாகி, அரசு மன்னிப்பு கிடைத்தால், பிரதமர் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது. 


மலாய்க்காரர்களின் அச்சம்

மலாய்க்காரர்கள் மத்தியில், எதிர் முன்னணியில் ஜனநாயக செயல் கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும், மலாய்க்காரர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படாமல் போகும் எனும் அச்சத்தை ஆளும் முன்னணி ஏற்படுத்த  தொடங்கியுள்ளது. இதை முதலில் தொடங்கி வெற்றிகண்டவர் மகாதிர்தான், அதை அப்படியே தொடர்ந்து ஆளும் முன்னணி பயன்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

இனங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகம் இருப்பதால், தேசிய முன்னணி மலாய்க்காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், எதிர் முன்னணி மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் பிரச்சாரம் நடைபெறுவதை தவிர்க்க முடியாது.


மாற்றம் ஒன்றே மாறாதது என்பது என்றும் பொய்க்காது!இன்றைய அளவில், இரு அணிகளுக்கும்  இருக்கும் வேற்றுமை, ஒரு முன்னணி மூத்த மலாய் கட்சியின் கீழ் மற்றவர்கள் பயணம் செய்வது; மற்றது, எல்லா கட்சிகளும் சரி சமமாக அமர்ந்து கொள்கை கோட்பாடுகளை வரையறுப்பது - இந்த இரண்டாம் சித்தாந்தம் நாட்டிற்கு புதியதொன்று. தங்கள் இனம், தங்கள் மொழி, தங்கள் கலாச்சாரம் என ஒதுங்கியிருந்த - ஒதுக்கிவைக்கப்பட்ட நிலையில் வளர்ந்தவர்களுக்கு இது பெரிய புரட்சிகரமான ஒன்றுதான்.
 
மகாதிர், இந்த புதிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட முடிவெடுத்திருப்பதால், எல்லா இனங்களையும் உள்ளடிக்கிய திட்டங்களுக்கு எல்லா முன்னணிக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார் எனவே நம்பலாம். தன்னிச்சையாக முடிவெடுக்கமுடியாத கடிவாளம் இருக்கும்.

முன்பு மலாய்க்கர்களுக்காக முடிவெடுத்தவர், புது பொறுப்பில் மலேசியர்களுக்காக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருப்பார் - வெற்றியடைந்தால்.  மாற்றம் ஒன்றே மாறாதது என்பது என்றும் பொய்க்காது!


ஒரே மண்டபத்தில் மலேசிய மொழியில்

நம்மவர்களைப் பொறுத்தவரை, புதிய சித்தாந்தத்தில், மலேசிய மொழியைப் பயன்படுத்தும் கட்சிகளே அரசில் இருக்கும். எல்லாருடைய பிரச்னைகளையும் ஒரே மண்டபத்தில் மலேசிய மொழியில், மலேசியப் பிரச்னைகளாய் பார்க்கும் நிலை வரும். 

அண்மையில் ஒரு தமிழ் நாளிதழில் இன்றைய எதிர்கட்சியிலுள்ள இந்திய தலைவர்களின் படங்களைப் போட்டு மாலுமி இல்லாத நிலை என்பதாக விவரித்திருந்தது நம்மவர்களின் அறியாமையையே காட்டியது. நம் இனத் தலைவர்தான் நமக்கு சேவை செய்வார் என்பதை நாம் மறக்க வேண்டும். எல்லா மலேசியத் தலைவர்களும் எல்லா மலேசியர்களுக்காகவும் பெவும் செயல்படவும் வேண்டும் என்பதே புதிய சித்தாந்தமாக இருக்கவேண்டும்.

நம்மவர்கள் இத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா என்பதே கேள்வி!  விடை அவரவரிடமே உள்ளது!தொ.க.நாராயணசாமி 
மலாக்கா 
FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.