Advertisement
Admin Login

23:35:10
Sunday
25 February 2018

அ.மு.சு. பெரியசாமி பிள்ளை கிண்ணம்: பேரா மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான எழுவர் கால்பந்துப் போட்டி

அ.மு.சு. பெரியசாமி பிள்ளை கிண்ணம்: பேரா மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான  எழுவர் கால்பந்துப் போட்டி
சுங்கை சிப்புட் இந்திய இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 11 ஆண்டு காலமாக மிகச் சிறப்பாக வழிநடத்தப்பட்ட தமிழ்ப்பெரியார் அ.மு.சு. பெரியசாமி பிள்ளை கால்பந்து போட்டி, இவ்வாண்டும் மிகச் சிறந்த முறையில் நடைபெறும் என அவ்வியக்கத்தின் தலைவர் வீ.சின்னராஜு தெரிவித்தார். 

இதுவரையில் பொது, வெட்ரன் பிரிவுகளில் வழிநடத்தப்பட்ட அ.மு.சு. பெரியசாமி பிள்ளை கிண்ண கால்பந்துப் போட்டி, இவ்வாண்டு பேரா மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான எழுவர் கால்பந்துப் போட்டியென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார். இந்திய மாணவர்களைக் கால்பந்து விளையாட்டில் மேம்படுத்தவும், ஊக்குவிக்கும் இது போன்ற போட்டிகள் உறுதுணையாக இருக்கும் என அவர் கூறினார்.  


அ.மு.சு. பெரியசாமி பிள்ளை

வரும் மார்ச் 12ஆம் தேதி இங்குள்ள மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளித் திடலில் நடைபெறவுள்ள ஒருநாள் கால்பந்துப் போட்டியில் பேரா மாநில அளவில் 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட இந்திய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். தனியே குழுக்கள் அமைக்க இயலாத சிறு சிறு தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைந்து ஒரு குழுவாகவும் பங்கு பெறலாம். அதுமட்டுமல்லாது, பிற மொழிப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி உண்டு. ஆனால், அம்மாணவர்கள் ஏதாவது ஒரு தமிழ்ப் பள்ளியின் கீழ் தான் விளையாட முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது என்றார் வீ.சின்னராஜு.  

இக்கால்பந்துப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி வாகை சூடும் குழுவிற்கு 1,500 வெள்ளி ரொக்கமும், வெற்றிக் கிண்ணம், பதக்கங்கள் வழங்கப்படும். இரண்டாம் நிலையில் வெற்றி பெறும் குழுவிற்கு 1,000 வெள்ளி ரொக்கத்துடன் வெற்றிக் கிண்ணம், பதக்கங்கள் வழங்கப்படும். தொடர்ந்து, மூன்றாம், நான்காம் இடத்தைப் பற்றும் குழுக்களுக்குத் தலா 500 வெள்ளி ரொக்கத்துடன் கோப்பை, பதக்கங்கள் வழங்கப்படும். மேலும், கால் இறுதிச் சுற்றில் தோல்வியுற்ற 4 குழுக்களுக்குத் தலா 250 வெள்ளி ரொக்கமும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள குழுக்கள் நுழைவு கட்டணம் 100 வெள்ளியைச் செலுத்தி வரும் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் தங்கள் குழுவின் பெயரைப் பதிந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வீ. சின்னராஜு கேட்டுக் கொண்டார். மேல் விவரங்களுக்கு வீ.சின்னராஜு 013-508 1812,   கு.உமாபதி 016-537 6255


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.