00:00:47
Saturday
21 July 2018

அரசியல் தலைவர்கள் மக்கள் சிந்தனை குறைவாக இருப்பதையே விரும்புகிறார்கள்

அரசியல் தலைவர்கள் மக்கள் சிந்தனை குறைவாக இருப்பதையே விரும்புகிறார்கள்




பல ஆண்டுகளுக்கு முன் மலாக்கா மாநில இந்தியர்களின் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு எப்படி இருந்தது என்பதைப் பற்றி ஆய்வை செய்திருந்தேன். தற்போது மீண்டும் ஒரு முறை அதைப் பார்ப்பது நலம் என்று தோன்றுகிறது.


ஜாமீன்தார் கீழ் வாழ்ந்து வந்த உணர்வு.




நம்மவர்களுக்கு அரசியல் அமைப்புகள் மட்டுமல்ல, சமூக அமைப்புகளில் கூட உறுப்பினர் உரிமை பற்றி அதிகம் புரிவதில்லை. ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்பதே நம்மவர்களின் எண்ணமாக உள்ளது. தலைவரும் தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு அவருக்கு வேண்டிய காலம் முழுவதும் பதவி வகிப்பார். நம் ரத்தத்தில் ஊன்றியுள்ளது அரசர் அல்லது ஜாமீன்தார் கீழ் வாழ்ந்து வந்த உணர்வு. சற்று அதிகம் படித்தவர்கள் - அதுவும் மேல்நாட்டுப் படிப்பு படித்தவர்கள் -  சிலர் விதிவிலக்காக இருப்பதை நாம் பார்க்கலாம்.


பழைய அறிக்கையை அப்படியே கொடுத்து காலத்தை ஓட்டலாம்!

நான் முன்பு செய்த ஆய்வில் மலாக்காவில் இயங்கிய 21 ம.இ.கா. கிளைகளின் நிலையைக்கண்டு வியந்தேன். ஆண்டையும் தேதியையும் அழித்துவிட்டு மாற்றுத் தேதியையும் ஆண்டையும் போட்டு பழைய அறிக்கையை அப்படியே கொடுத்து காலத்தை ஓட்டலாம்! ஒரே தலைவரும் அவருடைய குழுவும் திரும்பத் திரும்ப போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்தல் ஆண்டில் கூட்டம் சற்று அதிகம் வரவழைக்கப்படும். தேர்தல் இல்லா ஆண்டு கூட்டம் குறைவாக இருக்கும், கூட்ட வரவு ஏட்டில்ஆங்காங்கே கையெழுத்து 
 வாங்கிக்கொள்வார்கள். 
                            
    
                                                                                            
இத்தகைய நிலை இன்றுவரை நீடிப்பது கண்கூடு! இப்போது நிறைய கிளைகள். நிறைய தலைவர்கள். எங்கிருந்தும் உறுப்பினர்களைச் சேர்க்கலாம். அப்பகுதியில் வசிக்கவேண்டும், ஓட்டுப்போடவேண்டும் எனும் நியதி இல்லை. மாநில, தேசிய நிலை தலைவர்களுக்குச் சார்ந்திருந்தால் போதும் என்பதே முக்கியம். கூட்டங்களில் பெரிய சிந்தனையைத் தூண்டும் பேச்சு இருப்பது குறைவு. இப்போதெல்லாம் கூட்டத்தைக் கூட்ட, பரிசு பொருள்கள், அதிர்ஷ்ட குலுக்கு போன்றவையும் சேர்க்கப்படுகின்றன! அப்பகுதியில் வாழ்பவர்களைப்பற்றியோ பொதுவாக இந்தியர்கள் நிலை பற்றியோ திட்டங்களைப்பற்றியோ பேச முனைபவர்கள் இருக்கிறார்களா என்பதைத் தேடவேண்டும்!

தமிழ் நூல்களின் பால் மாணவர்கள் ஈர்ப்பைக் கூட்டாதது யார்?

நாம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அவ்வப்போது அப்படிப்பட்ட பிரச்சினை எழுந்தால் சற்று அலட்டிக்கொள்வோம். நம் பத்திரிகைகள் அத்தகைய உணர்சிகளைத் தூண்டும் பிரச்னைகளால் தான் காலம் தள்ளிக்கொண்டிருக்கின்றன - நம்மவர்கள் அதைத்தானே விரும்புகிறார்கள்! தமிழ் மொழியைப் பற்றி யாரும் குறைத்து சொல்லிவிட்டால் உடனே கோபம் வரும். ஆனால் இதுவரை தமிழ் படித்தவர்களில் எத்தனை பேர் தமிழ் பத்திரிகைகளையும் நூல்களையும் படிக்கிறார்கள், நல்ல தமிழ் நிகழ்சிகளுக்கு ஆதருவு தருகிறார்கள் என்பதை சீர் தூக்கிப் பார்க்க நமக்கு முடியவில்லை! எங்கே கோளாறு என்பதைக் கண்டால்தனே சரி செய்ய முடியும். தமிழ் வாசிப்பு நம் பள்ளிக் கூடங்களில் முறையாக சொல்லிக்கொடுக்கப்பட்டு, தமிழ் நூல்களின் பால் மாணவர்கள் ஈர்ப்பைக் கூட்டாதது யார்? போதுமான நல்ல நூல்களையும் பத்திரிக்கைகளையும் வாங்கி பிள்ளைகளை வாசிக்க தூண்டாதது பெற்றோர்கள் தானே? அப்படி ஒழுங்காக படித்து வந்திருந்தால் நம் சிந்தனைகள், நம் பிள்ளைகளின் சிந்தனைகள் வளர்ந்து குறுகிய வட்டத்தைத் தாண்டி செல்லத் தயாராகி இருக்குமே!

அரசியல் தலைவர்கள் மக்கள் சிந்தனை குறைவாக இருப்பதையே விரும்புகிறார்கள்



இந்நாட்டில் அரசியல் தலைவர்கள் மக்கள் சிந்தனை குறைவாக இருப்பதையே விரும்புகிறார்கள். கல்வி கேட்பவர்களைக் கண்டால் இன்றைய அரசியல் தலைவர்கள் மிரண்டுப் போகிறார்கள். ஆகையால்தான் இருப்பதை அதே நிலையில் வைத்து ஆட்சி செலுத்த அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள். எல்லா நாடுகளிலும் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு இதுதான். எனவே நாம் விழித்துக் கொள்ள வேண்டுமானால் நாம்தான் முயலவேண்டும். உணர்ச்சிவசப்படுவதை சற்று குறைப்பது மிக முக்கியம். 'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' - வள்ளுவன் வாக்கு! 'கற்க கசடறக் கற்பது கற்றபின் நிற்க அதற்குத் தக' - இதுவும் நமக்கு ஏற்புடைய குறள்!  தமிழன் திருக்குறளைப் படித்து, புரிந்து,  பின்பற்றத் தொடங்கினால் நம் முன்னேற்றமும், நம் இளைங்கர்களின் மத்தியில் ஏற்பட்டு வரும்  அவலங்கள் எல்லாம் நீங்கும். நாம்தான் பொழுது போக்கு அம்சங்களுக்கு அடிமையாக - எல்லாவற்றிலும் நம்மை மகிழ்ச்சியூட்டும் கேளிக்கைகளையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் குடும்பங்களாக மாறிவிட்டோமே! 



தற்போது கைப்பேசி வழியும் பொழுது போக்கு! அதில் வரும் செய்திகள் போதும் என்ற நினைப்பு! உணர்ச்சியை தூண்டிவிடும் செய்தி வந்தால் நமக்கு கோபம் எகிர்கிறது! சிந்திப்பதற்கு நேரமில்லை! வீட்டிலோ தமிழ் நாட்டிலுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நம்மை மயக்கி வைக்கின்றன. அங்கு எடுததெற்கெல்லாம் ஆர்ப்பாட்டம் மயம். இங்கும் அப்படி செய்யலாமே எனும் எண்ணம் ஏற்பட அருமையான அடிப்படை! இவைதான் நம்முடைய நிலை இன்று! இப்படி இருக்கும் நமக்கு பொதுத் தேர்தலும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான்! நம் தலைவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்; தேர்தல் காலத்தில் கிடைக்கக்கூடிய அன்பளிப்புகளையும், பரிசுகளையும் பெற்று மகிழ நிறைய பேர் காத்துள்ளனர்!!

தொ. க. நாராயணசாமி 
மலாக்கா


#அடுத்த கட்டுரையில் நம் நாட்டு அரசியல் வரலாற்றில் நம்முடைய பங்கை விவரிப்பேன்.  நன்றி!












































FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.