12:45:34
Monday
20 August 2018

சீனப் பத்திரிகையில் செய்தி வந்தால்தான் சீட்டு கிடைக்குமா?

சீனப் பத்திரிகையில் செய்தி வந்தால்தான் சீட்டு கிடைக்குமா?
செய்தி : இரா.சரவண தீர்த்தா 


தாங்கள் செய்து வரும் மக்கள் சேவைகள் குறித்தான செய்திகள் சீனப் பத்திரிகையில் வந்தால்தான் அக்கட்சியின் தலைவர்களுக்கும சீன சமூகத்திற்கும் சேவையாளர்ககளைப்  பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்பது ஒரு தலைப்பட்ச பார்வையாகும் என்று இந்திய மக்கள் கருதுகின்றனர்.

ஜ.செ.க கட்சியில் இருக்கும் இந்தியத் தலைவர்கள் தங்களின் சேவைகள் குறித்த செய்திகளை தமிழ்ப் பத்திரிகைகளில்  மட்டுமே 
செய்தியாக வெளியிட்டு வருவதனால் அவர்களின் சேவைகள் குறித்து தலைமைத்துவத்திற்குத் தெரியாமல் போவதோடு சீன சமூகத்திற்கு அவர்களை பற்றிய அறிமுகம் அல்லது நெருக்கம் இல்லாமல் போய்விடும் நிலைமை உண்டு என்று ஜ.செ.க கட்சி வட்டாரங்களில் பேச்சு உண்டு என்று தகவல் அறியப்பட்டது.

களத்தில் இறங்கி வேலை செய்யும் கட்சி பொறுப்பாளர்களின்  சேவைகள் குறித்த தகவல்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமே வருவதனால் அவர்களின் சேவைகள் பொய்யாகிவிடுமா? அல்லது அவர்களின் சேவைகள் அங்கீகாரம் பெறுவதற்கு சீனப் பத்திரிகையில் செய்திகள் வரவேண்டிய கட்டாயம் உள்ளதா என்று இந்திய சமூகம் கேள்விகளை  ஜ .செ .க -விடம் கேள்விகளை முன்வைக்கிறது.

தன்னுடைய கட்சிக்காரர் செய்யும் களப்பணிகள் என்ன? அவருடைய சேவைகள் சமுதாயத்தின் மத்தியில் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன? தமிழ்ப் பத்திரிகை செய்தியாக இருந்தாலும் அதனை மொழிப்  பெயர்த்து தருவதற்கு கட்சியில் உள்ள  பரப்புரை பிரிவு  பொறுப்பேற்றுக் கொண்டு அந்தந்த வட்டாரத்தில் வேலை செய்யும் தலைவர்களை பிற சமூகங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் என்ன சிக்கல் உண்டு? என்று ஜ.செ.க கட்சியின் விசுவாசி ராஜேந்திரன் அண்ணாமலை( 40) நிருபரிடம் கேள்வி எழுப்பினார்.

ஜ .செ.க கட்சி அனைத்து இனக் காட்சியானாலும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர்கள் சீனர்களாக இருக்கின்றனர். நிலைமை இதுவாக இருப்பதனால் கிளை அளவில் உள்ள வேலை செய்யும்  இந்தியத் தலைவர்களைச் சந்தித்து நிலவரத்தை அறிந்து கொள்வதில் என்ன சிரமங்கள் இருக்கப்போகிறது?  இந்திய வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் மாநிலத் தலைவன்  இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். மண்டோர்களை நியமித்து அவர்கள் மூலம் தகவல்களைச் சேகரிப்பது முழுமையான தாக்கத்தைத் தராது என்று தாம் நம்புவதாக ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கூறினார்.

இந்தியர்களின் வாக்காளர்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் இந்திய வேட்பாளர்களை நிரப்புவதில் ஜ .செ.க கவனம் செலுத்த வேண்டும். இந்திய வேட்பாளர்களின் வெற்றிக்கு ஜ.செ.க நேர்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டிருக்கும் உள்ளூர் சேவையாளர்களை இனம்கண்டு அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார். தலைவர் பின்னால் வட்டமடித்து, முகத்தைக்காட்டும் முக விளம்பரங்கள் அற்ற வேட்பாளர்களை 
தலைமைத்துவம் புறக்கணித்துவிடக்கூடாது என்று ராஜன் வலியுறுத்தினார்.



ஜொகூர் ஜ.செ.க-வில், இந்திய வேட்பாளராக சீனாய் உத்தாமா சந்திர சேகரன் ஆறுமுகத்தை வரவேற்கும் குரல்கள் வலிமையாக கேட்பதைத் தொடர்ந்து நிருபரின் அலசலில் இத்தகவல் அறியப்பட்டது. மாநிலத்தில் தொடரப்பட்ட இந்தியர்களின் ஈமச் சடங்கு பிரச்சினை, புக்கிட் இண்டா தமிழ்ப் பள்ளி, ஆலய விவாகரங்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முன்னின்று குரல் கொடுக்கும் இந்தியத் தலைவராக  ஜொகூர் ஜ.செ.க இந்திய சமுதாயத்தில் மட்டுமல்ல மலாய்க்காரர்,சீனர்கள் மத்தியில் அறியப்பட்டுள்ள சந்திர சேகரனுக்கு வரும் பொதுத் தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் நிறைந்துள்ளன.

" மக்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்துள்ளதை கட்சி அறியும்.  இந்திய மக்களின் ஆதரவை மட்டுமல்ல பிற இனத்தவர்களின் ஆதரவும் என்றென்றும் எனக்கு உண்டு. என்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கும் முடிவை  கட்சி தலைமைத்துவத்திடம் ஒப்படைத்துவிட்டேன்" என்று நிருபர் அழைத்துப் பேசுகையில் சந்திர சேகரன் இவ்வாறு கூறினார்.



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.