05:53:03
Thursday
15 November 2018

ரிங்லெட், ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் டான்ஶ்ரீ கேவியஸ்

ரிங்லெட், ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் டான்ஶ்ரீ கேவியஸ்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நகர்ப்புற வாசிகள் தங்களின் சொந்த ஊரில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் தரிசனத்தைப் பெற இல்லம் திரும்பியுள்ள வேளையில், மைபிபிபி தேசியத் தலைவரான டான்ஶ்ரீ எம்.கேவியஸ் அவர்களும் தமது சொந்த ஊரான கேமரன்மலையில் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடினார். 



கேமரன்மலையில் ரிங்லெட் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில்தான் வருடம்தோறும் தைப்பூசத் திருவிழா களை கட்டும். கேமரன்மலையில் உள்ள இந்துக்கள் அனைவருமே தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை தரிசிக்க இங்குதான் வருவார்கள். சிறப்புமிக்க இந்தக் கோயிலில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் இரண்டாவது முறையாகக் கலந்து கொண்டு வெற்றி வேல் முருகனின் ஆசி பெற்றது மகிழ்ச்சியளிக்கின்றது என டான்ஶ்ரீ கேவியஸ் கூறினார்.

நீல சட்டை, வெள்ளி வேட்டியில் காலை 10.00 மணியளவில் தமது பாரம்பரியமான கோயிலை வந்தடைந்தார் டான்ஶ்ரீ கேவியஸ். அவருடன் கேமரன்மலை மைபிபிபி தொகுதித் தலைவர் டத்தோ கண்ணா, தானா ராத்தா கிளைத் தலைவர் இளங்கோவன், மைபிபிபி உறுப்பினர்கள் புடைசூழ வருகை புரிந்த அவர், கோயிலின் நுழைவாயிலில் நின்று, வந்திருந்த பக்தர்களை இன்முகத்துடன் வரவேற்றார்.



கடந்த முறையும் இதே தைப்பூசத் திருநாளில் டான்ஶ்ரீ கேவியசை சந்தித்தவர்கள், இம்முறையும் அவரைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தனர்.

கோயில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு தண்ணீர் பந்தலுக்கும் டான்ஶ்ரீ கேவியஸ் வருகையளித்தார். ரிங்லெட் தமிழ்ப்பள்ளியின் தண்ணீர் பந்தலில் தலைமையாசிரியை குமாரி எட்டம்மாளுடன் அளவளாவிய அவர், கோயிலுக்கு வந்துள்ள பக்தர்களின் தாகம் தீர்க்க பந்தலிட்ட அப்பள்ளி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினார். 



அதனைத் தொடர்ந்து, காவடி மக்களோடு மக்களாக இணைந்து முருகப்பெருமானை தரிசித்தார். சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார். தொடர்ந்து, ஆற்றங்கரையிலிருந்து ஒவ்வொன்றாக வருகை புரிந்த அனைத்து காவடிகளையும் கண்டு மகிழ்ந்தார் டான்ஶ்ரீ கேவியஸ். 
அதோடு, தமது ஃபேஸ்புக்கில் கேமரன்மலையின் தைப்பூசத் திருநாளின் நேரடிக் காணொளியைப் பதிவேற்றம் செய்தார். பின்னர், கோயிலுக்கு வருகை புரிந்திருந்த கேமரன்மலை மக்களைச் சந்தித்து, கை குலுக்கி, அளவளாவி அவர்களோடே தமது மதிய உணவையும் உட்கொண்டார். 

மேலும், திருவிழாவிற்கு வருகையளித்த அந்நிய நாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு தைப்பூசத் திருவிழாவின் மகத்துவத்தை அவர் எடுத்துக் கூறினார். மேலும், முடி இறக்குதல், காவடி, பால்குடம் ஆகியவை கந்தனுக்கு செலுத்தப்படும் காணிக்கைகளாகும் என்று அவர் கூறியதைக் கேட்டு சுற்றுப்பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். தங்களுக்கு இத்திருவிழாவைப் பற்றி எடுத்துக் கூறிய டான்ஶ்ரீ கேவியசுக்கு நன்றி தெரிவித்தனர். 

இதனிடையே, கேமரன்மலை தைப்பூசத்தில் மைபிபிபி இளைஞர் அணி ஏற்பாட்டிலான 'இலவச கழிப்பறை சேவை' வழங்கப்பட்டிருப்பதை அவர் பெரிதும் பாராட்டினார். இந்த சேவை அடுத்த ஆண்டுகளிலும் தொடர தமது ஆதரவை அவர் வெளிப்படுத்தினார். 



FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.