20:14:27
Saturday
15 December 2018

வசந்தப்பிரியா...

வசந்தப்பிரியா...

எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு என் விரல்கள் மீண்டும் எழுத துடிக்கின்றன, இவளுக்காக. 

முக நூலில் இது என் முதல் பதிவாகக் கூட இருக்கலாம்.பதினான்கு வயதுக்கூட நிரம்பாத ஒரு பள்ளி மாணவியின் மீது ஆசிரியரின் கைபேசியை திருடியதாக ஆதாரங்களின்றி குற்றச்சாட்டுகள் திணிக்கப்படிருக்கின்றன. மற்ற ஆசிரியர்களால் துன்புறுத்தப்பட்டு பகடிவதைக்கப்பட்டுள்ளாள். ஏறத்தாள 5 மணி நேரம் ஒரு தனியறையில் அடைக்கப்பட்டுள்ளாள். பின் சம்மந்தப்பட்ட ஆசிரியர் தன் கணவனோடு அம்மாணவியின் பெற்றோர்களைச் சந்தித்து தனது சந்தேகத்தை அங்கும் கொட்டித் தீர்த்திருப்பதுதான் அநாகரீகத்தின் உச்சம். இந்த அனைத்து தகவல்களும் நமக்கு கிடைக்கப்பெற்றது தகவல் ஊடகங்களின் வாயிலாக மட்டுமே. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாகவே இருக்கலாம். ஆனால், சிறகுகளை விரித்து பட்டாம்பூச்சி போல் பறக்க வேண்டிய ஓர் உயிர் இன்று காற்றோடு காற்றாக கலந்ததன் சதி என்ன?


ஆசிரியர்களே மறந்தும்கூட இந்த ஆசிரியர்கள் செய்ததை நாம் நியாயப்படுத்த முயற்சித்தால் வசந்தபிரியாவின் ஆன்மா நம்மை மன்னிக்காது! நானும் ஓர் ஆசிரியைதான் என்ற ஆதங்கத்தில் கூறுகிறேன். இப்படியும் சிலர் நியாயப்படுத்துகின்றனர். 14 வயது மாணவிக்கு தூக்கு மாட்டிகொள்ள எங்கிருந்து தைரியம் வந்தது. தவறு அந்த மாணவி மீதானது, இந்த சிறு குற்றச்சாட்டுக்கா தூக்குமாட்டிக்கொள்வாள்? 

இவ்வாறு கூறினால் இந்த சமுதாயம் செல்லும் பாதையில்தான் கோளாறு! அற்ப மூடர்களே தயவு செய்து மனிதர்களாக சிந்தியுங்கள். 14 வயது மாணவிக்கு தூக்கு மாட்டிகொள்ளும் அளவுக்க மூளை மலிந்து விட்டதா?  என கேட்கிறீர். படித்து பட்டம் பெற்று பல ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்த இவர்களுக்கு மூளையே இல்லை என நான் கூறினால் என்ன தவறிருக்கப்போகிறது? சாதாரண கைபேசி திருட்டு (அல்லது தொலைத்துவிட்டாரோ அது அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்) விசயத்தை எப்படி கையாள வேண்டும் என்ற பகுத்தறிவுக்கூடவா இல்லை. அந்த பச்சிளம் குழந்தையை ஒரு நாள் முழுக்க சித்திரவதை செய்திருக்கின்றனர்; மனதளவிலும் உடலளவிலும். ஒரு சராசரி குடும்ப பின்னணியைக் கொண்ட மாணவி, ஆசான்களை தெய்வமாக பார்க்கும் இனத்தை சேர்ந்த மாணவி, தன் மேல் அபாண்டமாக பழி திணிக்கப்பட்டதோடு, உயிரையே வைத்திருக்கும் பெற்றோர்களிடம் புகார் அளிக்கப்பட்டபோது, என்ன செய்திருப்பாள். இதுவரை மாணவர்களாக இருந்த அனைவரும் ஒரு நொடி யோசித்து பாருங்கள். வேதனை ஒரு பக்கம் அவமானம் ஒரு பக்கம் தண்டனை ஒரு பக்கம் அடேயப்பா. அந்த பிஞ்சு மனம் எத்தனை பாடுபட்டிருக்கும்? அது வெம்பி ஒடிந்து போய்விடாதா? அந்த சூழலில் இவள் நிதானத்தை இழந்ததால் வந்த விளைவு இந்த மரணம். ஆனால், அவள் தன் நிதானத்தை இழக்க யார் காரணம்?


ஆசிரியர்களே பள்ளிகளில் நமக்கென ஒரு வரையறை இருக்கின்றது.  அந்த SOPயை மீறி நாம் செயல் பட்டால் அது 100% நம் தவறுதான். அதுவும் எந்த பள்ளியிலும் இல்லாத ஒரு புதிய அணுகுமுறை இந்த ஆசிரியர்களால் கையாளப்பட்டுள்ளது. அதன் பின்விளைவு அந்த மாணவி உயிர் நீத்தாள். மாணவர்கள் பள்ளி சட்ட திட்டங்களை மீறினால் குமுறும் நாம், நம்மை போல் ஒரு சக ஆசிரியை சட்டத்தையே தன் கையில் எடுத்ததை  ஞாயப்படுத்தலாமா?


ஆசிரியர்களே ஆரம்பப் பள்ளிகளில் இருந்து இடைநிலைப்பள்ளிகளுக்கு வரும் நம்மின மாணவர்களுக்கு உறைவிடமே நாம்தான். ஓர் இந்திய ஆசிரியரையாவது பார்ப்போமா? ஓர் இந்திய ஆசிரியராவது நம் மொழியில் நம்மிடம் பேசுவார்களா என்ற அவர்களின் ஏக்கங்களை நான் மனதார உணர்ந்திருக்கிறேன். அதற்காக அவர்கள் செய்யும் தவறுகளை மறைத்து அவர்களை மூடர்களாக்கச் சொல்லவில்லை. தயவு செய்து அவர்களின் தன்மானத்தை உரசி பார்க்காதீர்கள். இந்த வசந்தப்பிரியா வேற்று இன மாணவியாக இருந்திருந்தால் இவளுக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்குமா? நம்மின மாணவர் என்றால் இவள் என்ன உங்களுக்கு கிளுக்கீறையா? மறந்து விடாதீர்கள். தினை விதைத்தவன்  தினை அறுப்பான், வினை விதைத்தவன் தான் வினை அறுப்பான். உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். நாளைக்கு அவர்களுக்கும் இந்நிலை வராது என்பது என்ன நிச்சயம்?


கேவலம் மாதச் சம்பளத்துக்காகவும் அவரவர் சுயநலத்திற்காகவும் மட்டும் இத்துறையை தேர்ந்தெடுத்திருந்தால் தயவு செய்து உங்கள் வேலையை விட்டுவிடுங்கள். ஆசான் என்பது உன்னதமான தொழில். இன உணர்வும் சமுதாய உணர்வும் இல்லாதவர்கள் ஆசிரியர்களாக வாழ தகுதியற்றவர்கள்.


இத்துணை விஷயங்கள் நடந்தபின் அந்த கைப்பேசி உங்களுக்கு கிடைத்துவிட்டால், வசந்தப்பிரியாவை உங்களால் மீட்டுக்கொடுக்க முடியுமா? அவளுக்கு ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய முடியுமா? இவள் மரணம் படித்த வர்க்கத்தினரின் பின்னடையின் உச்சம். இதுவே முதலும் முடிவுமாக இருக்கட்டும்! சம்பந்தப்பட்டவர்களே இவ்விவகாரம் குறித்து கட்டாயமாக நடவடிக்கை எடுங்கள். எங்கள் பிள்ளையின் மறைவு ஈடு இணையற்றது. இன்னொரு வசந்தப்பிரியாவை இழக்க இந்த சமுதாயம் தயாராக இல்லை!
FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.