கேடிஎம் கொமியூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்
By Admin | Published on : Feb 02, 2018 02:55 am

கோலாலம்பூர், பிப்.2:
கேடிஎம் கொமியூட்டர் ரயில் அட்டவணை சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்படவிருப்பதாக அதன் தலைமை நிர்வாகி கயிர் ஜொஹாரி இஷாக் தெரிவித்தார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு இரட்டை தண்டவாளத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேஎல் சென்ட்ரல் முதல் புத்ரா நிலையம், குவாங் தொடர்ந்து சுங்கை பூலோ வரை ஒரு தண்டவாளம் மூடப்படுகின்றது. இந்தப் பணிகள் நவம்பர் 2019ஆம் ஆண்டு நிறைவடையும் என நம்பப்படுகின்றது.
சவால் மிக்க சூழ்நிலையிலும் பயணிகளுக்கு நிறைவான சேவையை வழங்க வேண்டும் என்ற உறுதியுடன் கேடிஎம் நிறுவனம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது என அவர் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.
இதனால், தற்போது 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை செயல்பட்டு வந்த கிள்ளான் - தஞ்சோங் மாலிம் - கிள்ளான் செல்லும் ரயில் சேவை 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும். பயன்பாட்டு குறைவான நேரத்தில் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும்.
இனி பூலாவ் செபாங்கிலிருந்து நேரடியாக பத்துமலைக்குச் செல்ல முடியாது. பூலாவ் செபாங்கிலிருந்து வரும் பயணிகள் கேஎல் சென்டரலில் இறங்க வேண்டும். அங்கிருந்து செந்தூலுக்கு தயார் செய்யப்பட்ட பேருந்தில் அவர்கள் பயணிக்க வேண்டும்.
அதேபோல பத்துமலைக்கு செல்ல வேண்டிய பயணிகள் செந்தூல் நிலையத்திலிருந்து மட்டுமே பயணிக்க முடியும். கேஎல் சென்ட்ரல் வர வேண்டும் என்றால், வழங்கப்படும் பேருந்து சேவையைப் பயன்படுத்த வேண்டும். இந்தச் சேவை 20 முதல் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை செயல்படும்.
இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பயணிகள் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேல் விவரங்கள் தேவைப்பட்டால், www.ktmb.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம். 03-22671200 எனும் எண்ணுக்கு அழைக்கலாம்.