05:52:09
Monday
18 June 2018

489 இடைநிலைப்பள்ளிகளில் 724 தமிழாசிரியர்கள்: வெற்றிடங்களை நிரப்பும் செயல்நடவடிக்கையில் கல்வி அமைச்சு

489 இடைநிலைப்பள்ளிகளில் 724 தமிழாசிரியர்கள்: வெற்றிடங்களை நிரப்பும் செயல்நடவடிக்கையில் கல்வி அமைச்சு
புத்ராஜெயா, ஜன.29:

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதை உறுதிச் செய்யும் கடப்பாட்டில் கல்வி அமைச்சு முனைப்பாக உள்ளது என அதன் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் தெரிவித்தார்.

தற்போது 489 இடைநிலைப்பள்ளிகளில் 724 தமிழாசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நடப்பில் 588 தமிழாசிரியர்கள் மட்டுமே தேவைப்படுகின்ற நிலையில், சற்று கூடுதலானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

எனினும், குறிப்பிட்ட சில இடைநிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவரும் சூழல் குறித்து, கல்வி அமைச்சு அறிந்துள்ளது. மேற்குறிப்பிட்ட 724 தமிழாசிரியர்களில் பெரும்பாலோர், வெறும் தமிழ் மொழியை மட்டும் போதிக்கவில்லை. அவர்கள் இதர மொழிப்பாட ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

சில இடைநிலைப்பள்ளிகளில் இதர மொழிப்பாட ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை நிலவி வருவதால், தமிழாசிரியர்களில் சிலர் தற்காலிகமாக இதர மொழிப்பாடங்களை போதிக்கும் சூழ்நிலையில் இருந்து வருகின்றனர் என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், சுமார் பத்துக்கும் குறைவான இடைநிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்பும் அவசியத்தை கல்வி அமைச்சு அறிந்துள்ளது. ஆதலால், தற்காலிகமாக இதர பாட ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள தமிழாசிரியர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு முழு நேர தமிழாசிரியர்களாக நியமிக்கும் செயல்நடவடிக்கையில் கல்வி அமைச்சு ஈடுபட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில் எஸ்.டி.பி.எம் வகுப்புக்களிலும்  முழு நேர தமிழாசிரியர்கள் இல்லாத குறையை கல்வி அமைச்சு களைந்துள்ளது. பல ஆண்டுகளாக வெறும் நான்கே தமிழாசிரியர்கள் இருந்த சூழ்நிலை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  எஸ்.டி.பி.எம் தமிழ் வகுப்புக்களுக்கு 14 தமிழாசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டதன் வழி இவ்வாண்டு தேர்வுக்கு தமிழை தெரிவு செய்த தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 427-லிருந்து 789-ஆக உயர்ந்துள்ளது.

தொடர் முயற்சியாக, 2020இல் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கிய பாடத்தை பள்ளி பாட நேரத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் முயற்சிக்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் வழி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி – தமிழ் இலக்கியத்தை தேர்வு பாடமாக எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்க்கல்விக்கும் தமிழாசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்புகளும் வராத வண்ணம் கல்வி அமைச்சு அதன் செயல் நடவடிக்கைகளில் மிக கவனமாக உள்ளது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.