15:13:04
Tuesday
23 October 2018

'பத்மஶ்ரீ' விருது பெறுகிறார் டத்தோ ரம்லி இப்ராஹிம்

'பத்மஶ்ரீ' விருது பெறுகிறார் டத்தோ ரம்லி இப்ராஹிம்
கோலாலம்பூர், ஜன.26:
மலேசியாவைச் சேர்ந்த இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரான டத்தோ ரம்லி இப்ராஹிம் இந்தியாவின் உயரிய கௌரவ விருதான 'பத்மஶ்ரீ' விருதைப் பெறவிருக்கிறார்.

உலகின் பல நாடுகளில், இந்தியர்களின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், ஒடிசி உட்பட நவீன நடனங்களை வழங்கி டத்தோ ரம்லி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள சிறந்த கலைஞராவார்.

டத்தோ ரம்லியின் திறமையைப் பாராட்டி போற்றும் வண்ணம் அவருக்கு இந்தப் பத்மஶ்ரீ விருது வழங்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, நடனத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வரும் ரம்லி இப்ராஹிமிற்கு, இந்திய அரசு இதற்கு முன்னரே சங்கீத் நாடக அகாடமி விருதையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், நம் நாட்டின் கலைத் துறைக்குச் சிறப்பான பங்காற்றியதற்காக மலேசிய அரசாங்கம் அவருக்கு டத்தோ விருதினை வழங்கியது.


பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்தவர்களுக்கு இந்தியாவின் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில், நம் நாட்டு கலைஞரான ரம்லி இப்ராஹிமிற்கு பத்மஶ்ரீ விருது வழங்கப்படுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது மலேசியர்களுக்கெல்லாம் பெருமையான தருணமாக அமைவதோடு, நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு மணிமகுடமாக திகழ்கின்றது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.