Advertisement

11:58:53
Thursday
26 April 2018

மலேசியர்கள் பிறர் நலன் கருதாதவர்களா? பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகளைக் கட்டாயமாக்குங்கள்!

மலேசியர்கள் பிறர் நலன் கருதாதவர்களா? பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்புகளைக் கட்டாயமாக்குங்கள்!
கோலாலம்பூர், ஜன. 26 : அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில்  மக்களிடையே  பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டுமென சமூக ஆர்வலர் டான் ஸ்ரீ லீ லாம் தாய்  வலியுறுத்தினார்.  ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் அவ்வகுப்புகள் நடத்தப்படுவது அவசியமென அவர் தெரிவித்தார்.

அண்மையில் PPR மக்கள் குடியிருப்புத் திட்ட அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த  அசம்பாவிதத்தில் சிறுவன் ஒருவன்  உயிரிழந்தான். அந்த  சம்பவம் சில மலேசியர்கள் பிறர் நலன் கருதா அக்கறையின்மையுடன் நடந்துக் கொள்வதைக்  காட்டுவதாக அவர் சாடினார்.

இந்த விழிப்புணர்வு  வகுப்பு,  இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடக்காமலிருப்பதற்கு வழிவகுக்கும். மேலும்,  குடியிருப்புப் பகுதிகளில் மறைகாணிகள் பொருத்துவதன் மூலம் பொது உடமை சேதம் செய்யும் நடவடிக்களையும் தடுக்க முடியுமென லீ கூறினார்.

மக்கள் குடியிருப்புத் திட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்,  மேல் மாடியிலிருந்து பொருட்கள் கீழே  விழுவதைத் தடுப்பதற்காக  வலைக் கம்பியை அமைக்கும் பரிந்துரை  அப்பகுதி துப்புரவு பணியாட்களுக்கு தான் சிக்கலை உண்டாக்குமென சொன்னார். இதனால் அப்பகுதி மக்கள் இன்னும் அதிகளவில் குப்பைகளையும் பொருட்களையும்  வீசக்கூடுமென லீ தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் குடியிருப்புத் திட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சிறுவனின் தலையில் நாற்காலி விழுந்ததால் உயிரிழந்த சம்பவத்தில் வீசிப்பட்ட நாற்காலியிருந்து எடுக்கப்பட்ட மரபணு முடிவுக்காக  போலீஸ் காத்திருக்கின்றது. இதுவரை 43  நபர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மேல் விசாரணைக்காக மேலும் பலர் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்தது. சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தொடர்பிருக்கலாமென போலீஸ், இறுதி பட்டியலிட்ட ஐவரிடம்  குரல் சோதனையும் நடத்தியது. எனினும், அந்த சோதனையின் வாயிலாக எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 15ஆம் தேதி, கோலாலம்பூர், பந்தாய் டாலாமில்  அடுக்குமாடியில் குடியிருந்த 15 வயது S. சத்தீஸ்வரன் தனது தாயாருடன் நடந்து செல்கையில் மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட நாற்காலி தலையில் பட்டு சம்பவம்  இடத்திலேயே உயிரிழந்தான்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.