12:47:29
Monday
20 August 2018

அம்மாவும் அப்பாவும் எப்படி ஒன்றாக வந்து நிற்கப்போகிறார்கள்

அம்மாவும் அப்பாவும் எப்படி ஒன்றாக வந்து நிற்கப்போகிறார்கள்
அம்மாவும் அப்பாவும் நேரில் வந்தால்தான் அடையாள அட்டை வழங்கப்படும் என்று மலாக்கா மாநில பதிவிலாகா ஒரே முடிவாக அறிவித்ததில் மாணவன் நவீன் பால் ராஜ் ( 16) எதிர்காலம் பாதித்து உள்ளது.

ஒன்றரை மாதக் கைக்குழந்தையில் நவீனை தெரிந்தவரிடம் விட்டுச் சென்ற அம்மாவும், அப்பாவும் எப்படி ஒன்றாக வந்து நிற்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை ஆனால்
பதிவிலாகாவின் செயல் விதிமுறைகளைக் கடைப்பிடித்தாகவேண்டும் என்ற கங்கணத்தில் அதிகாரிகள் இப்படியொரு கட்டளையை நவீன் மேல் திணித்துள்ளனர் .

நவீனை சிறுவயதிலிருந்து பாதுகாத்து வளர்த்து வரும் சின்னப்பன் தம் வளர்ப்பு மகனைக் கூட்டிக்கொண்டு மலாக்கா பதிவிலாகாவுக்கு அழைத்துச் சென்ற பொழுது அதிகாரிகள், நவீனின் ரத்த சம்பந்தப்  பெற்றோர்களைத்
தேடிக்கொண்டுவருமாறு ஆலோசனை சொல்லி அனுப்பியுள்ளனர். சின்னப்பனும் தேடாத இடம் இல்லை. பெற்றோர்கள் கிடைக்கவில்லை.

நவீனிடம் பிறப்புப் பத்திரம் இருக்கிறது. ஆரம்பப் பள்ளியில் படித்த சான்றிதழ்கள் உள்ளன. இடைநிலைப்பள்ளியிலும் படித்துக் கொண்டிருக்கும் சான்றுகள் உள்ளன. ஆனால் இவைகள் பிறப்புப் பத்திரம் எடுத்துக் கொடுப்பதற்கான வலுவான காரணங்கள் இல்லை என்பதை பதிவிலகாவின் விதிமுறைகள் அடம்பிடிப்பதால் பெற்றோர்கள் கிடைக்கும் வரை, நவீன் அடையாள அட்டை இல்லாமல் தத்தளிக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

சமூகப் பிரசனைகளைக் கேட்டு அதற்குத் தீர்வுகளைக் காணும் பெம்பேலா எனப்படும் மலாக்கா தேசிய முன்னணியின் சமூக நல அமைப்பின் தலைவர் ஹாஜி அமீர் ஹம்சாவிடம் இப்பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.

"அம்மாவும் அப்பாவும் நாட்டுப் பிரஜைகள். அவர்களைத் தேடி கொண்டு வந்து விட்டால் அல்லது இச்செய்தியைக் கண்டு அவர்கள் வந்தால் நவீனுக்கு அடையாள அட்டையை வழங்கி விடலாம் என்று பதிவிலாகா கூறியுள்ளது" என்றார் .

அப்படி அவர்கள் கிடைக்காவிட்டால் நவீனுக்கு அடையாள அட்டை கிடைத்துவிடுமா? நவீனின் அம்மாவும் அப்பாவும் நாட்டின் பிரஜைகள் என்று பிறப்புப் பத்திரத்தில் பதிவு செய்திருந்தும் அடையாள அட்டை கிடைப்பதில் ஏன் இவ்வளவு சிக்கல் என்று நிருபர் அமீரிடம் கேட்டபோது,
முதலில் இந்தச் செய்தியைப் போடுவோம்.அப்படி எதுவும் நடக்காவிட்டால் பெம்பேலா மாற்று வழியை அணுகும் என்றார் அமீர்.

மக்களுக்கு உதவாத விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரலாமே என்று கேட்டபோது அது பணிக்கான விதிக்கப்பட்ட விதிமுறைகள்(SOP).
அதன்படிதான் அதிகாரிகள் செயல்பட முடியும் என்று அமீர் பதிலளித்தார்.

குடும்ப வறுமையால் நவீனை சின்னப்பனிடம் ஒப்படைத்தபோது சட்டமுறைப்படி தத்தெடுப்பு செய்யப்படவில்லை என்று சின்னப்பன் நிருபரிடம் கூறினார். நவீனைத் திறன் கல்வி கல்லூரியில் சேர்த்து விடுவதற்கான சின்னப்பனின் முயற்சிக்கு இந்த அடையாள அட்டைப்பிரச்சனை தடையாக இருந்துவிடக்கூடாது என்று சின்னப்பன் பெரிதும் எதிர்பார்க்கிறார்.



நவீனின் பிறப்புப் பத்திரத்தில் அவனுடைய தாயின் பெயர்
KALAVATHI A/P DILE FASSING ( 740406-05-5102) என்றும்
தந்தையின் பெயர் NAYADIRAN A/LVADIVAIL(650515-05-5401) என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவீன் பிறக்கும் பொழுது அவனுடைய அம்மாவுக்கு வயது 27.அப்பாவுக்கு வயது 36.அவர்களுடைய இறுதி முகவரி LADANG SUNGAI BARU LUBOK CHINA 71150 LINGGI NEGERI SEMBILAN என்று பிறப்புப் பத்திரத்தில் பதிவாகியுள்ளது. KLINIK DESA LUBOK CHINA என்பது நவீன் பிறந்த இடமாகப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவலைக் கண்டு நவீனின் பெற்றோர்கள் அவனுக்கு உதவ வருவார்கள் என்று சின்னப்பன் பெரிதும் எதிர்பார்க்கிறார்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.