பதிவு ரத்தான நிலையில் முக்குலத்தோர் பேரவை பொதுக் கூட்டமா?!?!

கோலாலம்பூர், நவ.26 –
சங்கப் பதிவிலாகா அதிகாரி, பதிவை ரத்தாக்கிய நிலையில் தேசிய முக்குலத்தோர் பேரவை வரும் 27.10.2017ல் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 16 ஆகஸ்ட் 2016ம் தேதியில் சங்கப் பதிவதிகாரி சார்பில் நோர் அய்னி பிந்தி ஹம்சா கையொப்பமிட்டு, ஜாலான் பெர்ஹெந்தியான் செந்தூலில் உள்ள முக்குலத்தோர் பேரவைக்கு அனுப்பிய கடிதம் பேரவை உறுப்பினர்களுக்குக் கசிந்துள்ளதால் அடுத்த வார இறுதியில் நடைபெறும் 109வது தேவர் ஜெயந்தி விழாவும் நல்லெண்ண விருந்தும் சட்ட விரோதமானது என்று கருதுகிறார்கள்.
கடந்த நான்கு வருடமாக மலேசிய முக்குலத்தோர் பேரவை முறையாக பேராளர் மாநாட்டை நடத்தவில்லை. எனவே, சங்கப் பதிவதிலாகாவிற்கு எந்த ஆவணங்களும் அனுப்பப்படவில்லை. ஆகையால் சங்கப் பதிவதிகாரி 2481/96 (கூட்டரசு பிரதேசம்) என்ற பதிவெண்ணைக் கொண்ட பேரவையின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. ஆனால், இதற்கு மத்தியில் கடந்த 19.10.2012ல் பேரவைக்குப் புதிய கட்டிடம் வாங்கும் நோக்கில் பேரளவில் ஒரு விருந்து செலயாங்கில் நடத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் சுமார் 2 லட்சம் ரிங்கிட் நிதி திரட்டப்பட்டிருக்கிறது. இந்த வரவு செலவை உறுதிப்படுத்த முடியவில்லை என்று பேரவை நியமித்த புறக் கணக்காய்வாளர் நிறுவனம் அனுப்பிய கடிதமும் வாட்ஸ்ஆப் மூலம் வெளியே கசிந்துள்ளது.
அரசாங்கம் கொடுத்த மானியம்
கடந்த பொதுத் தேர்தலின் போது அரசாங்கம் இந்தப் பேரவையின் செயல்பாட்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கியிருக்கிறது. அந்த நிதி தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சில உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தேர்தல் விதிக்கு முரணான செயலாகும். ஆனால், இத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஓரங்கட்டப்பட்ட பேரவையின் பொருளாளர்
சங்கப் பதிவிலாகாவின் தரவுபடி நா.கை.சிவபிரகாசம் தான் பேரவையின் சட்டப்பூர்வமான பொருளாளர். ஆனால், இவர் முறையாக தம் கடமையைச் செய்ய தேசியத் தலைவர் திரு.கண்ணுசிவா இடங்கொடுக்கவில்லை. திரு. நந்தகுமார் என்ற தேசிய இளைஞர் பகுதித் தலைவர் திரு. நந்தகுமாரை வலக்கரமாகப் பயன்படுத்திக் கொண்டு பேரவையின் நிதியை முறைகேடாக நிர்வாகித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளாக வங்கிக்கு முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், பொருளாளர் சிவபிரகாசம் வங்கிக் கணக்கை நிர்வகிக்க முடியவில்லை. இதற்கிடையில் தலைவரின் அலுவலகத்தில் பணிபுரியும் கார்த்திக் மூலமும் கட்டிடத்திற்காக நிதி திரட்டப்பட்டிருக்கிறது. இந்த நிதி இன்றுவரை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
கட்டிடம் என்ற காணல் நீர்!
பத்திரிக்குக் கிடைத்த தகவலை வைத்துப் பார்க்கும்போது பேரவை உறுப்பினர்கள் கண்ட கட்டிடக் கனவு இன்று வெறும் காணல் நீராகிவிட்டது என்பது தெரியவருகிறது.பேரவைக்குக் கட்டிடம் வாங்கப் போகிறோம். காசு பணம் தாருங்கள் என்று உறுப்பினர்களை ஏமாற்றி பல லட்சம் ரிங்கிட் வசூலிக்கப்பட்டு இன்றுவரை கட்டிடத்திற்கான அடிச்சுவடுகூட காணப்படவில்லை. பொதுவாக ஓர் இயக்கம் சொத்து வாங்கப் போகிறது என்றால், அதற்காக ஒரு தனி நிர்வாகக் குழு அமைக்கப்படுவதோடு தனி வங்கிக் கணக்கும் நிர்வகிக்கப்பட வேண்டும். கட்டிட நிதி வளர்ச்சியின் நிலவரம் அவ்வப்போது உறுப்பினர்களுக்குக் குறிப்பாக நன்கொடை வழங்கியவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள் வரை அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றுபத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வருகிறது. எனவே, பேரவை உறுப்பினர்கள் யார், யார் - யாரிடம் நன்கொடை வழங்கினர் என்பதை முன்வந்து அறிவிக்க வேண்டும். இதன் மூலம் எத்தனை லட்சம் ரிங்கிட் கட்டிடத்திற்காகத் திரட்டப்பட்டது என்ற விபரம் தோராயமாக அறியப்படும். அதற்கெல்லாம் பேரவைத் தலைவர் திரு. கண்ணுசிவா விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
வேல் பாரி கட்டிடத்திற்கு நிதி வழங்கினாரா?
பேரவையின் பொறுப்பாளர்கள் கட்டிடத்திற்காக நிதி கேட்டு திரு. வேல் பாரியையும் அணுகியிருக்கிறார்கள். அவர் 5 லட்சம் ரிங்கிட் கொடுப்பதாக நிபந்தனையோடு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அதாவது, முதலில் பொறுப்பாளர்கள் கட்டிடத்தை அடையாளம் கண்டு முன்பணம் செலுத்த வேண்டும் என்பதாகும். தேசிய மற்றும் மாநிலப் பேரவையின் பொறுப்பாளர்கள் யாவருக்கும் கட்டிடம் பற்றி தகவல் கிடைக்காததால் கட்டிட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்று யூகிக்க முடிகிறது. எனவே, வாக்குறுதி கொடுத்த திரு.வேல் பாரி கட்டிடத்திற்கு 5 லட்சம் ரிங்கிட் கொடுத்தாரா என்ற கேள்விக்குப் பதில் காண முடியவில்லை.
பேரவையின் செயலாளர் யார்?
ஒரு தேசிய நிலையிலான இயக்கத்திற்குச் செயலாளர் மிகவும் முக்கியமானவர். ஆனால், மலேசிய முக்குலத்தோர் பேரவையின் தேசியச் செயலாளர் யார் என்று இன்றுவரை மர்மமாக உள்ளது. பினாங்கைச் சேர்ந்த டத்தோ தங்கவேலு சங்கப் பதிவிலாகாவின் ஆவணத்தின்படி பொதுச் செயலாளர் ஆவார். ஆனால், கருப்புசாமி என்பவர் தான்தான் செயலாளர் என்று கூறிக்கொள்வதோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வேடிக்கை என்னவெற்றால் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் கருப்புசாமி கடந்த மூன்றாண்டுகளாக பதிவிலாகாவிற்கு அனுப்பவேண்டிய ஆவணங்கள் எதுவும் அனுப்பப்படாமல் பேரவையின் பதிவு ரத்தாகுவதற்கு வழிவகுத்துள்ளார்.
பேரவைப் பொறுப்பாளர்கள் கணக்கு தெரியாதவர்களா?
பொதுக் கணக்கு, கட்டிடக் கணக்கு, விருந்து கணக்கு, கல்விக் கணக்கு என்று நான்கு காரியங்கள் இன்று பேரவையில் சர்ச்சையாகியுள்ளன. ஆனால், பேரவைப் பொறுப்பாளர்கள் இதைப் பற்றி எதுவும் கண்டு கொள்வதில்லை. பேரவையின் பதிவு ரத்தான விபரம்கூட அவர்களுக்குத் தெரியாதாம். பேரவையின் உறுப்பினர்கள் இந்த கணக்குகள் பற்றி விபரம் தெரியாமல் இருந்தால் இயக்கம் உறுப்படுமா என்று சமுதாயத்தில் கேள்வி எழுந்துள்ளது.
பரபரப்பான கடைசி நிலவரம்
இன்று பத்திரிக்கையாளர்களுக்குக் கிடைத்த வாட்ஸ்ஆப் தகவல்படி, பேரவையின் பொதுச் செயலாளர் திரு. ஏ.எஸ்.கருப்புசாமி தம் செயலாளர் பதவியை ராஜினமா செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. அவர் தேசியப் பேரவையின் தலைவர் மற்றும் உச்சமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய மூன்று பக்கக் கடிதத்தில், பேரவையில் நடக்கும் பல்வேறு குழப்பங்களுக்குத் தாம் பொறுப்பேற்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். பொதுச் செயலாளரே பதவி விலகிய நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை பதிவு ரத்து பெற்ற இயக்கத்தின் இந்த மாநாடு எப்படி நடைபெறும் என்று தெரியவில்லை!