15:13:14
Tuesday
23 October 2018

ஶ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா கோலாகலமாகத்​ ​ தொடங்கியது

ஶ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா கோலாகலமாகத்​ ​ தொடங்கியது
கடந்த  29 ஆண்டுகளாக ஶ்ரீ சக்தி ஆஸ்ரமத்தில் நடத்தப்படும் நவராத்திரி விழா கடந்த​ வெள்ளிக்கிழமை மஹாகாளி யாகத்தோடு மலர்ந்தது. மஹாகாளி என்பவர் மிகவும் துணிச்சலானவர். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் தங்கு தடைகளை எதிர்கொள்ளும் வல்லமையை அருள்கிறார் இவர். அச்சம் மற்றும் துன்பங்களை நீக்குவதற்கு மஹாகாளி யாகம் பொருத்தமானது. எனவே,பக்தர்கள் அனைவரும் தங்கு தடைகளை விட்டொழிப்பதோடு அவற்றை தைரியத்துடன் எதிர்க்கொண்டு மகிழ்ச்சியோடு திளைத்திருக்க மஹாகாளி யாகத்தோடு இவ்வருடத்தின் நவராத்திரி விழா இனிதே தொடங்கியது.


இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று ஶ்ரீ மஹாலக்ஷ்மி கோமாதா பூஜை மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் யாகம் நடைபெற்றது. சோகமான நிலையில் இருக்கும் ஒருவரை யோகமான வழிக்கு மாற்றுவது தெய்வ வழிபாடுகள்தாம். எந்த வழிபாடாக இருந்தாலும், குருவின் வழியாக அதை முறைப்படி செய்வது மிகுந்த பலனைத் தரும். கோ பூஜை என்று சொல்லக்கூடிய, பசுவிற்கான பூஜை சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும். 


பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவக்கிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன. பசுவின் வாலைத் தொட்டுக் கும்பிட்டாலே வந்த தடைகள் விலகும் என​ சமயத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே,48 நாட்கள் பூஜைகளின் தொடக்கமாக ஶ்ரீ மஹாலக்ஷ்மி கோமாதா பூஜை ​ நடைபெற்றது.

கடந்த​ வாரத்தின் பூஜைகளின் சிறப்பு அம்சமாக​ விளங்கியது 108 குட​ ஜல​ அபிஷேகமாகும். தங்காக் தோட்டப்புறத்திலிருக்கும் ஊற்று நீரை பக்தர்கள் எடுத்து வந்து அந்த​ நீரை அவர்களது கரங்களால் அபிஷேகம் செய்வார்கள். ஆரம்பக் காலத்தில் தோட்டப் புறத்தில் வாழ்ந்த​ மக்கள் ஊற்று நீர் மற்றும் ஆற்று நீரை எடுத்து அபிஷேகம் செய்து வந்த​ கலாச்சாரத்தைப் பின்பற்றும் வகையில் இந்த நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. 

தோட்டப்புறத்தில் வாழும் மக்கள் அவர்களின் கைகளால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய​ வாய்ப்பு வழங்க​ வேண்டும் என்பதே இப்பூஜைகளின் நோக்கமாகும். 500க்கும் மேற்பட்ட​ பக்தர்கள் இப்பூஜையில் கலந்து சிறப்புப் சேர்த்தனர். பக்தர்களின் கரங்களால் செய்யப்படும் அபிஷேகத்தை ஏற்று பின்னர் தேவதைப் போல் அலங்காரம் செய்யப்பட்டு மிகவும் அழகாக​ தனது சிம்மாசனத்தில் அம்பாள் வீற்றிருந்தாள்.

மேலும், தொடர்ந்து வரும் பூஜைகளிலும் அபிஷேகங்களிலும் மலேசியா​ முழுவதுமுள்ள பக்தர்கள் தங்காக் ஶ்ரீ சக்தி ஆஸ்ரமத்திற்கு வருகை புரிவதோடு பூஜைகளில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஆலயத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.