18:40:40
Tuesday
19 February 2019

ஜமாலை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை

ஜமாலை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் பேச்சுவார்த்தை
காஜாங், ஜூன் 1: தலைமறைவாகி விட்டதாகக் கருதப்படும் ஜமால் யுனூசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவின் உதவியை நாடுவோம் என உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

"ஜமாலின் மீது உள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் மலேசியாவில் தண்டிக்கப்படுவார். அவர் இந்தோனேசியாவில் இருப்பதாக நம்பப்படுவதால் அவரைக் கண்டுபிடிக்க இந்தோனேசியா அதிகாரிகளின் ஒத்துழைப்பை நாடி உள்ளோம்" என்றார் அவர்.

நேற்று சாஹாடா மசூதியில் நிகழ்ந்த நோன்பு துறப்பு விழாவில் காஜாங் சிறைச்சாலை ஊழியர்களோடு கலந்துக் கொண்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் முஹிடின் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ஜமாலை கண்டுபிடிக்குமாறு தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹருணைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். அதோடு, சுங்கை பெசார் அம்னோ பிரிவு தலைவர் ஜமால் போலீசாரால் தவறாக நடத்தப்பட மாட்டார் என்பதையும் அவர் உறுதிபடுத்தினார்.

"என்ன பாதுகாப்பு வழங்குவது? அவர் குற்றங்களைச் செய்திருக்கிறார் என்பதை அறிந்ததால் தான் அவர் ஓடிவிட்டார்" என மொகிடின் சாடினார்.

ஜமால் ஆறு வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவற்றுள் கடந்த வருடம் பொது மக்களுக்கு தொல்லைத் தரும் வகையில் மதுபான பாட்டில்களை சிலாங்கூர் அரசாங்க செயலகத்தின் நுழைவாயிலில் உடைத்த குற்றமும் அடங்கும்.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.