05:56:45
Monday
18 June 2018

பெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவில் புதிய முகங்களா?

பெர்னாமா தமிழ்ச் செய்தி பிரிவில் புதிய முகங்களா?
தமிழ்ச்செல்வன் ஐயாதுரை

கோலாலம்பூர், மே 31: இன்னும் 2 வாரங்களில் பெர்னாமா தமிழ், சீனம் ஆகிய இரண்டு மொழி செய்திகளும் ஒளிபரப்பட்ட வேண்டும் என்று தொடர்பு பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அதிரடி கட்டளையைத் தொடர்ந்து இரு பிரிவுகளும் மின்னல் வேகத்தில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

இத்தனைக் காலமாக இதோ வரும் அதோ வரும் என்ற எக்கச்சக்கமான அறிவிப்புகளை நம்பி வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த தமிழ்ச் செய்திப் பிரியர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகவே அமைந்துள்ளது. 

அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அறிவிப்பில் திக்குமுக்காடிப் போயிருக்கும் இவ்விரு பிரிவின் தலைவர்கள் யார் என்று இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், தமிழ்முரசு மேற்கொண்ட அலசலில், பெர்னாமா தமிழ்ச் செய்திப் பிரிவுக்கு அத்துறையில் அனுபவமிக்கவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. 

ஊடகத் துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவரான இவர், பெர்னாமா தமிழ்ச் செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குத் தகுதியானவர் என்றும் இந்த அலசலில் தெரியவந்துள்ளது. 

இரண்டு வாரங்களில் தமிழ்ச் செய்தி வர வேண்டும் என்று அமைச்சர் சொல்லிவிட்டார். இனி எல்லா வேலைகளும் மின்னல் வேகத்தில் நடந்தாக வேண்டும். இந்தக் குறுகிய காலத்தில் புதியவர்களைத் தேடி புதுப் பொலிவு கொடுக்கப்படுமா? ஏற்கெனவே வேலை செய்த, பரந்த அனுபவமிக்கவர்களை வைத்து அபூர்வமான பயணத்தை பெர்னாமா தமிழ்ச் செய்திப் பிரிவு தொடங்குமா என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது.

மலேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றமானது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அனுபவசாலிகள்தாம் நாட்டையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடனில் மூழ்கிக் கிடந்த மலேசியாவை ஒன்றாக இணைந்து மீட்டெடுக்கும் முயற்சியை மேற்கொள்கிறார்கள். அதுபோல, பெர்னாமா தமிழ்ச் செய்திப் பிரிவை அத்தலைவர் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு கண்டிப்பாக அனுபவமிக்கவர்களை அவர் தமது பக்கத்தில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம் என்ற ஆலோசனையும் தமிழ்முரசு மேற்கொண்ட அலசலில் முதன்மை கூற்றாக அமைந்துள்ளது. 

எது எப்படியோ, இன்னும் இரண்டு வாரத்தில் பெர்னாமா தமிழ்ச் செய்தியை ஒவ்வொரு தமிழர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை சத்திய வாக்காகக் கருதி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருப்பவர்கள் புதிதாகக் களத்தில் இறங்கும் தரப்புக்கு உரிய கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது தமிழ்முரசின் வேண்டுகோளாகும். 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.