05:56:11
Monday
18 June 2018

ஆர்ஓஎஸ் கடிதத்தை பொதுமக்களுக்கு காட்டாதது ஏன்? டத்தோஶ்ரீ மெக்லின் கேள்வி

ஆர்ஓஎஸ் கடிதத்தை பொதுமக்களுக்கு காட்டாதது ஏன்? டத்தோஶ்ரீ மெக்லின் கேள்வி
கிள்ளான், மே 23: 
மைபிபிபி கட்சிக்கு தாம்தான் தேசியத் தலைவர் என சங்க பதிவிலாகா (ஆர்ஓஎஸ்) அங்கீகரித்து கடிதம் வழங்கியுள்ளதாக கூறிய டான்ஶ்ரீ எம்.கேவியஸ், ஏன் அக்கடிதத்தை பொதுமக்களுக்கு காண்பிக்கவில்லை என டத்தோஶ்ரீ மெக்லின் டி'குருஸ் கேள்வி எழுப்பினார். 

தமது பதவி விலகல் கடிதத்தை சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக வெளியிட்ட டான்ஶ்ரீ கேவியஸ், இந்தக் கடிதத்தை மட்டும் ஏன் வெளியிடவில்லை? 

டான்ஶ்ரீ கேவியஸ் இதுநாள் வரையில் பல சூழ்ச்சிகள் புரிந்துள்ளார். ஆகையால், அவரிடம் உள்ள கடிதம் உண்மையில் ஆர்ஓஎஸ் வெளியிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுநிலையில் அக்கடிதம் வெளியிடப்படாத வரையில், இதிலும் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது என டத்தோஶ்ரீ மெக்லின் தெரிவித்தார். 



"பூதாகரமாகி கொண்டிருக்கும் இந்த விஷயத்தில், ஆர்ஓஎஸ் தலையிட்டு தெளிவுப்படுத்த வேண்டும். ஒருவேளை மைபிபிபி தேசியத் தலைவராக டான்ஶ்ரீ கேவியஸ் அங்கீகரிகப்பட்டால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், முடிவு எங்கள் தரப்புக்கு சாதகமாக அமைந்தால், சூழ்ச்சி புரியாமல் அவரால் அதனை ஏற்றுக் கொண்டு விலக முடியுமா?" எனும் கேள்வியையும் டத்தோஶ்ரீ மெக்லின் எழுப்பினார்.

நேற்று மாலை 7.30 மணியளவில் சிலாங்கூர் மைபிபிபி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு சொன்னார். இந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில மைபிபிபி தொகுதித் தலைவர்கள், கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டு டத்தோஶ்ரீ மெக்லின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

டத்தோ சந்திரக்குமணனை வெளியேற்றியது யார்?

மைபிபிபி கட்சியின் உதவித் தலைவராக இருந்த டத்தோ சந்திரக்குமணன் மைபிபிபி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது யாரால் என்பது அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும். 

ஆனால், அப்போது முதன்மை உதவித் தலைவரான நான்தான் அவரை திட்டமிட்டு வெளியேற்றியதாக டான்ஶ்ரீ கேவியஸ் கூறியது அப்பட்டமான பொய் என்று டத்தோஶ்ரீ மெக்லின் தெரிவித்தார். 

எனது தலைமைத்துவத்தில் உள்ள தொகுதித் தலைவரை நீக்க வேண்டும் என்றாலே தேசியத் தலைவரின் ஒப்புதல் தேவை. அப்படியிருக்க சந்திரக்குமணனை நான் எப்படி நீக்க முடியும்? 

தேசியத் தலைவருக்கு தெரியாமல் இக்கட்சியில் எதுமே நடக்காது. சந்திரக்குமணன் வெளியேற்றப்பட்டதும் அப்படிதான். டான்ஶ்ரீ கேவியசின் ஒப்புதலுக்கு பின்னரே அவர் வெளியேற்றப்பட்டார் என டத்தோஶ்ரீ மெக்லின் விளக்கம் அளித்தார். 


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.