20:01:40
Saturday
15 December 2018

தமிழ் மலேசியர்கள் மத்தியில் சமுதாயத் தலைவர்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டதே!

தமிழ் மலேசியர்கள் மத்தியில் சமுதாயத் தலைவர்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டதே!
நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் அகில மலாயா தமிழர் சங்கம், திராவிடர் கழகம் போன்றவை உருவாகி ஆங்காங்கே செயல்பட்டு வந்தன. ஆங்காங்கே வாசகர் மன்றங்கள், கலை மன்றங்கள் போன்றவை இயங்கிவந்தன. இவை அரசியல் சார்பற்ற அமைப்புகளாகவே சமுதாய நன்மைக்கான செயல்களில், அவற்றின் வசதிக்கேற்ப செய்துக்கொண்டிருந்தன. சொந்தமாகவே நிதியைச் சேர்த்து செயல்பட்டன என்பதும் கவனிக்கத் தக்கது. சேவை மனப்பான்மை அதிகம் இருந்தது.இடையில், தமிழவேள் கோ.சாரங்கபாணி, சிங்கையிலிருந்து, தம் தமிழ் முரசு நாளிதழ் வழி தமிழ் மாணவர்களுக்காக தமிழ் மாணவர் மணிமன்றத்தைத் தோற்றுவித்து அவர்களுக்கென்று சிறப்பு சின்னங்களையும், அங்கீகாரத்தையும்  கொடுத்து மாநாடுகளையும் நடத்தினார். பிற்காலத்தில் இந்த மாணவர் மணி மன்றமே இளைஞர் மணிமன்றமாக மாறி சமுதாயச் சேவையைச் செய்தது. அன்றைய இளைய தமிழ் ஆசிரியர்களும் பிற தமிழ் இளைஞர்களும் மிகவும் ஆர்வமுடன் இந்த அமைப்பில் சேர்ந்து தமிழ்/தமிழர் சார்ந்த பல செயல்களில் எல்லா இடங்களிலும் ஈடுபட்டனர். பல மாநாடுகளை எல்லா மாநிலத் தலை நகரங்களிலும் நடத்தி பல இளம் தலைவர்களை உருவாக துணைபுரிந்தனர். சமுதாயப் பிரச்னைகளைத் தொட்டு அவர்களின் மாநாடுகளில் இளையோர் துணிவுடன் பேசிய காலம் அது.இதற்கு தமிழவேள் கோ.சாரங்கபாணி தொடங்கிய 'தமிழர் திருநாள்' நிகழ்ச்சி பெரிதும் உறுதுணையாக இருந்தது. நாடு முழுவதும், சிறு தோட்டங்கள்-கிராமங்களிலும்கூட தமிழர் திருநாளை, அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடினார்கள். சொந்தமாகவே நிதி சேர்த்து இவற்றைச் செய்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து பேராசிரியர்களை வரவழைத்து நம் நாடு முழுவதிலும் சிறப்புச் சொற்பொழிவை நிகழச் செய்த பெருமை தமிழவேளையே சேரும். அவரும் தை மாதம் முழுவதும் தமிழர் திருநாளுக்காகவே தம் நேரத்தை ஒதுக்கி நாடு முழுவதும் வளம் வருவார். அவர் போன்ற சமுதாயத் தலைவரை பிறகு பார்க்க முடியவில்லை.

அப்போதுகூட தை மாதத்தில் பொங்கல்தான் கொண்டாட வேண்டும் என சிலர் வாதிட்டு ஒதுங்கி இருந்தனர். அவர்களுக்கு தமிழ் நேசன் நாளிதழ் ஆதரவாக இருந்தது. இருப்பினும் தமிழவேள் கோ.சாரங்கபாணி தமது பணியில் உறுதியாக நின்றார்.
நூற்றுக்கணக்கான இயல்-இசை-நாடக-விளையாட்டுப் போட்டிகள் தமிழர் திருநாளில் எல்லா ஊர்களிலும் நடந்தன. இவற்றின் வழி பல பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விளையாட்டளர்கள் உருவாகினார்கள். அவர்களில் சிலர் - நான் உட்பட - இன்றும் இருக்கிறார்கள்!

அப்போதைய ம.இ.கா. இத்தகைய அமைப்புகளையும் அவற்றின் செயல்களையும் ஒன்றும் செய்யவில்லை. அவர்களின் நிர்வாகத்திலேயே கவனம் செலுத்தினர். அதன் காரணமாகவே சமுதாயத் தலைவர்கள் - அரசியல் சாயமில்லாமல் - உருவாக வசதியாய் இருந்தது.

பிற்காலத்தில், சிங்கை பிரிந்தது - கோ.சா.வின் பங்கும் குறைந்தது. வழிகாட்ட சரியான சமுதாயத் தலைவர் தேசிய ரீதியில் தோன்றவில்லை. அதுவே நம் சமுதாயத்திற்கு ஒரு பின்னடைவு என்பது என் கணிப்பு.இன்றைய துன் சாமிவேலு ம.இ.கா.விற்கு தலைமை ஏற்றபிறகு, ம.இ.கா.வே கலை நிகழ்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கியது. அதில் தனிப்பட்ட முறையில் ஆர்வமுள்ள சாமிவேலுவுடன் பண்டிதனும் இணைந்து கலை நிகழ்ச்சிகளை அரசியலுக்குள் இழுத்தனர்.இளைஞர் அமைப்புகளுக்கு அரசு மான்யம் இளைஞர் விளையாட்டு அமைச்சின் வழி கிடைக்கும் காலம் வந்தது. செயல்பட்டுக்கொண்டிருந்த மணிமன்ற  இளைஞர் அமைப்புகளை, ம.இ.கா.வுடன் இணைந்து செயல்பட வைத்தால் - மான்யமும் கிடைக்கும் - இரு சாராருக்கும் நன்மை பயக்கும் எனும் எண்ணத்தை விதைத்து செயல்படத் தொடங்கினர். தனித்தன்மையுடன் இளைஞர் மணிமன்றம் செயல்படுவதை முடக்கும் செயலில் ம.இ.கா. தலைமை வெற்றி பெற்றது. இன்றுவரை மீள முடியவில்லை! - முடியாத நிலை!ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் பள்ளிக்கூடங்களில் துணைப் பாட நூல்களைக் கொடுத்து நல்ல பெயர் எடுக்கவிருந்த  தருணத்தில் தலையிட்டு,  ம.இ.கா.வைக் கலக்காமல் எதுவும் செய்ய முடியாத நிலையையும் ம.இ.கா தலைமையே செய்தது. ம.இ.கா.வை கலக்காத எந்த அமைப்பும் மலேசிய இந்தியர்கள் மத்தியில் பெயர் போடக் கூடாது எனும் எண்ணம் மேலோங்கிய காலம் அது. அவர்களுக்கு பலம் கொடுத்தது அரசாங்க மான்யம் எனும் இனிப்பு! நன்றாக செயல்படும் அமைப்புகளுக்கு மான்யங்களை அரசாங்க அமைச்சுகள் வழியும், ஆளும் அரசியல் கட்சிகளின் வழியும் கொடுக்க முடிவு செய்யப்பட்டு, அவற்றின் வழி, சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாகவே நடந்துகொள்ள வைக்க முடியும் எனும் அரசியல் திட்டமே அது. தமிழ் அமைப்புகளைப் பொறுத்தவரை இந்த திட்டம் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளது. மா.இ.கா.விலுள்ளவர்களே சமூக அமைப்புகளை ஏற்படுத்தி தங்களுக்குள்ளேயே மான்யங்களை பெற்று பயன் அடைவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே! அண்மையில் செடிக் வழி பயன்பெருபவர்களின் பட்டியலைப் பார்த்தாலும் புரியுமே.
இத்தகைய வியூகம் நம்மவர்களின் மத்தியில் துடிப்புமிக்க - சொந்த காலில் நிற்கக் கூடிய சமூக அமைப்புகள் தோன்றாமல் பார்த்துக்கொள்கிறது என்பதே வேதனையான உண்மை.

எல்லாவற்றையும் அடக்கி ஆளும் எண்ணம் மேலோங்கினால் எத்தகைய நிலை உருவாகும் என்பதை இன்று நாம் பார்க்கிறோம். இவற்றை மீறி ஆங்காங்கே சில அமைப்புகள் இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம். ஆனால் அவை, சமுதாயத்தின் சற்று உயர் நிலையிலுள்ளவர்களுக்காக இயங்குபவை. சாதாரண நம்மவர்களின் நலன்காக்கும், குரல் கொடுக்கும், போராடும் இயக்கங்களைக் காணோம். 


அதற்கேற்றாற்போல் நம் இளைஞர்களின் மனப்போக்கும் சொந்தமாக நிதியைத் தேடி செயல்படுவதற்கு தோதாக இருப்பதாகத் தெரியவில்லை. நவீன தொழில்நுட்ப சாதனங்கள், திருவிழாக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், ஆகியவை இவர்களை ஆட்கொண்டுள்ளதால், அமைப்புகள் அமைத்து, கூட்டங்களைக் கூட்டி, பலவித கருத்துகளைத் திரட்டி, முடிவு செய்து, நடவடிக்கைகளில் இறங்கும் முதிர்ச்சியான சேவை செய்யும்  நிலையில் இவர்களைப் பார்க்க முடியவில்லை.எல்லாற்றிலும் அரசியல் கை வைத்துவிட்ட நிலையிலிருந்து மீளாவிட்டால், பிரதிபலன் பார்க்காமல், போது நல நோக்குடன், பல இன்னல்களையும் சமாளித்து  செயல்படும் நல்ல சமுதாயத் தலைவர்களை இனி நாம் பார்க்க இயலாது.

அரசியலில் துடிப்புமிக்க இளைஞர்கள் எவ்வளவு தேவையோ, அந்த அளவு சமுதாய மேம்பாடிற்கு, அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறி வழி காட்டக் கூடிய, சொந்தக் காலில் நிற்கக் கூடிய  சமூகத் தலைவர்களாக முதிர்ச்சியான சிந்தனைக் கொண்ட இளைஞர்கள் உருவாக வேண்டும். இவர்கள் அரசியல்வாதிகளுக்கப்பால் இருந்து செயலாற்றும் பக்குவமும் திடமும் கொண்டவர்களாக இருத்தல் அவசியம். அப்படிப்பட்ட இளைஞர் கூட்டம் உருவானால் மகிழ்ச்சியே! இன்றைய இளைஞர்கள்தான் பதில் சொல்ல முடியும்!

தொ.க.நாராயணசாமி,
மலாக்கா


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.