19:44:48
Tuesday
19 February 2019

மைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது!

மைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது!
‘ஞாயிறு’ நக்கீரன்

கோலாலம்பூர்,

ஏறக்குறைய கால் நூற்றாண்டு காலமாக தேசிய முன்னணியின் புகழ் பாடியும் அதன் தலைமையை துதிபாடியும் வந்த டத்தோஸ்ரீ கேவியஸ், தேசிய முன்னணியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார் என்று அக்கட்சியின் தலைமைப் பொறுப்பாளர்களே படபடத்து வருகின்றனர்.

தேசிய அரசியலில்  மட்டுமல்ல; சமூக மட்டத்திலும் தகவல் உலகிலும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் உலா வந்த மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவரான கேவியஸ், கடந்த ஆண்டின் மத்தியப் பகுதியில் சீனிவாசகம் சகோதரர்கள் உருவாக்கிய மக்கள் முன்னேற்றக் கட்சியை, இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப கடந்த 25 ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறார்.

 அப்படிப்பட்ட் கேவியஸ், அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெற விருக்கும் 14-ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் எப்படியும் போட்டியிட்டேத் தீருவது என்னும் முனைப்பில் பலவகையில் முயற்சி மேற்கொண்டு வந்தார்.தற்பொழுது, அந்தத் தொகுதி ம.இ.கா.விற்கே என்று ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில், அது தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழுக்கென்றும் கௌரவக் குறைச்சல் என்றும் கருதி கொதிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்ட நிலையில்தான், தேசிய முன்னணியில் இருந்து விலகும் முடிவிற்கு உறுதியாக வந்துவிட்டதாகத் தெரிகிறது.

 ம.இ.கா. தேசியத் தலைவர் பொறுப்பில் இருந்தும் இயற்கை வள-சுற்றுச் சூழல் அமைச்சர் பதவியில் இருந்தும் விலக வேண்டிய நிலையை, தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட டத்தோஸ்ரீ பழனிவேலை அந்த அளவோடு விட்டு விடாமல், பழனிவேல்  இனியும் ம.இ.கா. உறுப்பினர் இல்லை என்பதால், அவரை சுயேச்சை உறுப்பினர் என்று அறிவிக்கும்படி ம.இ.கா.-வின் இன்றைய தலைமை விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையமும் அவரை தனி உறுப்பினராக அறிவித்தது.

இந்த சுழ்நிலையில்தான், கேவியஸ் மிகவும் நுட்பமாக காய் நகர்த்த ஆரம்பித்தார். கேமரன் மலை தற்பொழுது சுயேச்சை உறுப்பினரின் தொகுதி என்பதால், அந்தத் தொகுதியில் பிறந்த தான்தான் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று கட்சிக்காரர்களிடம் சொல்லிக் கொண்ட அவர், அண்மைக் காலமாக அங்கு பிரச்சார நடவடிக்கையையும் சமூக உதவித் திட்டங்களையும் மேற்கொண்டு வந்தார்.2004-இல் நாட்டில் நடைபெற்ற பதினோராவது பொதுத் போர்தலின்போது உருவாக்கப்பட்ட அத்தொகுதியில் மஇகா-தான் முதன்முதலாகக் களம் கண்டது. ஆனால், அப்போது அந்தத் தொகுதி தனக்கு என்று சொல்லிவிட்டு, கடைசியில் அன்றைய தேசிய முன்னணி தலைமை ம.இ.கா.விற்கு அப்போது ஒதுக்கி விட்டது என்று இப்போது சொல்லும் கேவியஸ் இத்தனைக் காலமும் இதைப்பற்றி மௌனம் காத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தேசிய முன்னணி தலைமையும் இது குறித்து எந்த விளக்கமும் சொல்லாமல், இடைப்பட்ட காலத்தில் இந்தத் தொகுதி குறித்து மைபிபிபியும் ம.இ.கா.வும் அறிக்கைப் போரையும் வாய்ச் சண்டையையும் நடத்தியதை யெல்லாம் வேடிக்கைப் பார்த்துவிட்டு, கடைசியாக, அது ம.இ.கா. தொடர்ந்து போட்டியிட்டு வரும் தொகுதி என்பதால் அந்தக் கட்சிக்கு விடப்படுகிறது என்று முடிந்த முடிவாக தெரிவித்துவிட்ட நிலையில்தான், மைபிபிபி கட்சி மட்டத்தில் கொந்தளிப்பு எழுந்துள்ளது.இது வெல்லாம் உண்மைதான் என்று அந்தக் கட்சியின் தேசிய துணைத் தலைவரும் பெருந்தொழில் அதிபருமான டத்தோஸ்ரீ காந்தி முத்துசாமி செம்பருத்தியிடம் ஒப்புக் கொண்டார்.

ஏறக்குறைய 45 ஆண்டுகளாக தேசிய முன்னணிக்கு தொய்வின்றி ஆதரவு நல்கிவரும் கட்சி மைபிபிபி. அத்துடன், இந்தக் கட்சிக்கு கால் நூற்றாண்டு காலமாக தலைமை ஏற்றுவரும் கேவியஸ், தன்னுடைய சொந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும், அது மறுக்கப்படும் பட்சத்தில் கட்சி நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கொந்தளிப்பது ஒருபுறம் இருக்க, மாற்று முடிவையும் எடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் வரும் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 17-ஆம் நாள் கட்சி மத்திய செயலவையின் அவசரக் கூட்டம் நடைபெறவிருக்கிறது என்றும் அப்போது எடுக்கும் முடிவின் அடிப்படையில் அவசரப் பொதுக் கூட்டம் நடைபெறும். தேசிய முன்னணியைவிட்டு விலக வேண்டும் என்னும் கருத்தைத்தான்  பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர் என்றெல்லாம் மு.காந்தி தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கிவிட்ட இந்தச் சூழலில், மைபிபிபி கட்சி ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பரபரப்பிற்கும் சலசலப்பிற்கும் மறுபெயர்தான் மைபிபிபியோ?FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.