18:55:54
Saturday
15 December 2018

கேமரன்மலை விவகாரத்தில் 'யுடர்ன்' செய்கிறது தேமு!

கேமரன்மலை விவகாரத்தில் 'யுடர்ன்' செய்கிறது தேமு!
தானாராத்தா, ஏப். 16: பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் ஆசிபெற்று கேமரன்மலையில் களப்பணி ஆற்றி வந்த என்னை, சிகாம்புட் நாடாளுமன்றத்தில் போட்டியிடச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் தமது கவலையைத் தெரிவித்தார்.

கேமரன்மலையில் கடந்த 4 ஆண்டுகளாக மைபிபிபி சார்பாக களத்தில் இறங்கி அளப்பரிய சேவைகளை வழங்கி வருகிறேன். மக்களுக்குப் பிடித்த, வெற்றி பெறக்கூடிய வேட்பாளருக்கே முன்னுரிமை என்று வாக்குறுதிகளை வழங்கிய தேசிய முன்னணி அரசாங்கம், இப்போது 'யுடெர்ன்' செய்கிறது. பாரம்பரிய தொகுதிக்கே சீட் எனவும் மைபிபிபிக்கு சிகாம்புட் தொகுதி என்று கூறுவதெல்லாம் சிந்தனைக்கு எட்டா ஒன்று என்றார் அவர். 

கடந்த 10.4.2018இல் 65ஆவது நிறைவு விழாவைக் கொண்டாடிய மைபிபிபி, தேசிய முன்னணியுடன் இணைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் தேசியத் தலைவர் பதவி ஏற்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், மைபிபிபிக்கு இதுவரை திருப்திகரமான வரவேற்பை தேசிய முன்னணி வழங்கவில்லை. இனியும் பொறுமையாக இருக்க முடியாது. கட்சியின் வளர்ச்சி உறுப்பினர்களின் நலன் ஆகியவற்றை முன்வைத்து தீர்க்கமான முடிவை எடுக்கும் காலகட்டத்திற்கு மைபிபிபி தள்ளப்பட்டுள்ளது எனவும் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கூறினார். 

நேற்றுக் காலை 10.00 மணியளவில் இங்குள்ள புஞ்சாக் அரபெல்லா மண்டபத்தில், மைபிபிபியின் கேமரன்மலைக்கான தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது. நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பதற்கு முன்னர், மைபிபிபிக்கு தேசிய முன்னணி வழங்கியிருக்கும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விவகாரம் குறித்து விளக்கினார். 

கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி லிப்பீஸ் தொகுதியிலிருந்து எல்லை மறுசீரமைப்பு செய்யப்பட்டது தொடங்கி மைபிபிபிக்கு (பிபிபி) ஒதுக்கப்பட்ட விவகாரம், பிபிபியிடமிருந்து மஇகா சதி செய்து அபகரித்துக் கொண்ட மறைக்கப்பட்ட உண்மை, தைப்பிங்கிலிருந்து வான்குடை வழியாகக் கொண்டுவரப்பட்ட வேட்பாளர், புந்தோங்கில் தோற்றுப்போன வேட்பாளரின் வருகை இப்படி அனைத்துமே கேமரன்மலையில் மறைக்க முடியாத ஒன்றாகும். 

"4 ஆண்டுகள் வேலை செய்த என்னைவிட, நான்கு மாதங்களாக வேலை செய்பவருக்கு வழங்கும் ஆதரவை, ஏன் தேசிய முன்னணி மைபிபிபி வழங்கவில்லை. வழங்க மறுப்பதன் காரணம்தான் என்ன? வேண்டாம் என்றால் சொல்லிவிட வேண்டியதுதானே. தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருப்பது, மேடைகளில் கோஷமிடுவது, கொடி பிடிப்பது, அலங்காரத்துக்குப் பயன்படுத்துவதற்கு மட்டும்தான் மைபிபிபி தேவைப்படுகிறது என்றால், இது தொடர்பில் கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் நன்மையளிக்கும் வகையிலான முடிவை எடுக்கும் நிலை வந்துவிட்டது என்று இவ்வேளையில் கூறிக் கொள்கிறேன்" என்றார் அவர். 

எது எப்படி இருப்பினும், கேமரன்மலையில் கால் பதித்த மைபிபிபி கண்டிப்பாக வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடும். இது உறுதி. இன்றல்ல, நேற்றல்ல, கடந்த 4 ஆண்டுகளாக சொந்த பணத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை வழங்கி வருகிறது. இதை யாராலும் மறைக்கவோ முடியாது. இது நிதர்சன உண்மை. மக்களுக்கு வாக்குறுதி வழங்கி இருக்கிறேன். அவர்களையும் கேமரன்மலையையும் காப்பாற்ற வேண்டும். எனவே, கேமரன்மலையில் நிச்சயம் போட்டியிடுவேன் என்ற உறுதியான, இறுதியான முடிவையும் டான்ஶ்ரீ கேவியஸ் தெரிவித்தார்.

இதனிடையே, மைபிபிபியின் கேமரன்மலை தேர்தல் கொள்கை அறிக்கை அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவில் 1,500க்கும் கட்சி உறுப்பினர்களும் கேமரன்மலை மக்களும் கலந்து சிறப்பித்தனர். கேமரன்மலை மக்களின் வாழ்வாதார உயர்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் தேர்தல் கொள்கை அறிக்கைக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.