18:25:10
Tuesday
19 February 2019

மலாக்கா அரசியலில் ஓர் அதிரவைக்கும் ஆளுமை கணேசன் சுப்பையா

மலாக்கா அரசியலில் ஓர் அதிரவைக்கும்  ஆளுமை  கணேசன் சுப்பையா

மக்கள்  பிரச்சினைகளை தைரியமாக உரக்கப்பேசும் மலாக்கா இளைஞன் கணேசன் சுப்பையாவின் பெயர் ( வயது 36) அரசியல்வாதிகள் மத்தியில் அதிரவைக்கும் பெயராகவும் மக்கள் மத்தியில் ஆதரிக்கும் பெயராகவும் வளர்ந்து வருகிறது.


தமிழ் இளைஞர் மணிமன்றப்  பேரவை  மலாக்கா மாநில  முன்னாள் தலைவராகச் சிறப்புடன் இயங்கிவந்த கணேசன், 
தேசிய அளவிலும், மாநில அளவிலும் மக்கள் பிரச்சினையைப் பொதுவுக்குக் கொண்டு வருவதில் ஒரு திராணி உள்ள அரசாங்க ஊழியராகத் திகழ்ந்து வருகிறார்.

மனித வளத் துறையில் பட்டம் பெற்ற இவர்,தேசிய முன்னணி அரசாங்கத்தில்  சட்டமன்ற மன்ற உறுப்பினர்களாக இருந்து வந்த டத்தோ வீரா ராகவன் காலக்கட்டத்திலும், டத்தோ பெருமாள் காலக் கட்டத்திலும்  8 வருடங்கள் உதவியாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இவர்களுக்குப் பணி புரிந்த காலத்தில்  சமூக சிக்கல்களைக் களையும் பல அலுவல்களுக்கு கவன ஈர்ப்பு அறிக்கைகளைத் தயாரிப்பதில் பங்களித்துள்ளார்.அரசாங்க ஊழியன் என்பதால் எதனையும் பேசக்கூடாது என்று அரசாங்கம் தடை விதிக்க வில்லை ஆனால் ஓர் அரசாங்க ஊழியன்  என்ன செய்யவேண்டும், என்ன செய்யத்  தடை உள்ளது என்ற விதிமுறைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். இதைத்தான் நான் செய்து வருகிறேன் என்றார் கணேசன்.

"ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களோடு பணிபுரிந்த அனுபவத்தில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது. நாம் மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு முன்னெடுக்கும் பிரச்சினைகளை கவனிக்க நமக்கு சூழ்நிலைகள் பெரும்பாலும் எதிராகவே அமையும்.சில சமயங்களில் சத்தமில்லாமல் அதுவே தானாக முடங்கிவிடும். சமுதாயத்துக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களிம் வேலைக்குச் சேர்ந்த நான்,  விரக்தி அடைந்தபின் ஜனநாயக செயல் கட்சியில் உறுப்பினரானேன். இதற்காக நான் போராட்டவாதிகளான அமரர்கள் பட்டு, மற்றும் கர்பால் சிங் போன்ற ஜாம்பவான்களின் அரசியல் பின்னணியை வாசித்தேன் என்றார் கணேசன்.மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்திலும் கலக்குரலை எழுப்பிய  ஆளாக இருந்து வந்த கணேசன், தலைமைத்துவங்களின் இயலாமை போக்கை சுட்டிக் காட்டுவது மணிமன்ற மணிகளின் உரிமையாகும் என்றார்.

அரசியலிலிருந்து தள்ளி நிற்க வேண்டிய மணிமன்ற தலைமைத்துவங்கள், இன்று நாற்காலிகளுக்கு கால்  கடுக்க நிற்கிறது என்று கூறி வருத்தப்பட்டார் கணேசன்.


மலாக்கா மாநிலத்தில் 5 வருடங்களாக தலைவர் பொறுப்பை ஏற்றிருந்த கணேசன், உறுப்பினர்களைக் கொண்டு கூட்டு பிடித்தல் மூலம், இளைஞர்களுக்கு வணிகம் செய்ய 20000 வெள்ளி வரை நிதி வழங்கி உள்ளார் என்பது பிரமிக்க வைக்கும் தகவலாகும்.


ஜாசின் லாலங் தமிழ்ப் பள்ளி, இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்பு , இந்திய இளைஞர்களுக்கான மேம்பாட்டு ஒதுக்கீடு,
 பாரம்பரிய விவகாரங்கள் குறிப்பாக மலாக்கா வரலாற்றில் பங்களித்த இந்தியர்களுக்கான தொல் பொருள் காட்சியகம், 
லிட்டல் இந்தியா முக்கியத்துவம், டத்தோ அருணாசலம் ஆளுமைக்கான அங்கீகாரம், ஆலயங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற முன்னெடுப்பு,கருமக்கிரியை பிரச்சினை,போன்ற பல போராட்டங்களுக்கு முன் நின்று குரல் கொடுத்ததும் வருகிறார்.


வரும் பொதுத் தேர்தலில் கணேசனை வேட்பாளராக கட்சி முன்மொழியுமா என்று நிருபர் கேட்டபோது, "வேட்பாளர் என்பது ஒரு உன்னத பொறுப்பு. கட்சிக்கும் மக்களுக்கும் நேர்மையாக உழைக்கும் கடமையாகிறது. அடிப்படையில் நான் ஒரு தொண்டன். பதவிகள் இருந்தால்தான் தொண்டு செய்ய முடியும் என்பதற்கல்ல. இருப்பினும்   மக்கள் சேவைகளை ஒரு இலக்குக்குக் கொண்டு செல்வதற்கான வாகனமாக அமைவதற்கு   பதவிகள் தேவைதான். கட்சி இந்த வாகனத்தை எனக்கு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்பது சரியல்ல.அது அவர்களாகவே தேர்ந்தெடுத்து கொடுப்பதாகும். இந்தப் பொறுப்பை யார் கையில் எடுத்தாலும் அவர்களின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று மலாக்கா மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான  கணேசன்  தன்னடக்கமாக பதில் உரைத்தார் .

காடெக் தொகுதியில் கட்சியின் மாநில உதவித் தலைவரும் தமிழர்களின் உரிமைக்காக கர்ஜிக்கும் இளம் தலைவருமான ஸ்வாமிநாதனின் பெயர் கட்சியின் தலைமைத்துவதால் வேட்பாளர் பட்டியலுக்கு முன்மொழியப்பட்டுள்ளது என்பது கட்சி வட்டாரத்துத்  தகவலாகும். 
FOLLOW US

© Copyright 2018. All rights reserverd.