DLP: மாணவர் நெற்றியில் குத்தப்படும் மாய முத்திரை

இருமொழி பாடத்திட்டம் குறித்து ஆசிரியர் அன்பழகனின் கருத்தையும் அக்கருத்து தொடர்பாக எதிர்வினை

ஆற்றியவர்களின் கருத்தையும் வாசகர்களின் பார்வைக்கு தினமுரசு முன்வைக்கிறது.

( முகநூல் பதிவு)

ஆசிரியர் அன்பழகன்,மலேசியா

DLP வகுப்புமுறையில் இருக்கும் பல சிக்கல்களில் மிகவும் முதன்மையானது என்று நான் எப்போதும் சுட்டுவது அதை பள்ளியில் அமுலாக்குவதில் இருக்கும் சிக்கலும், ஏற்படுத்தும் பின் விளைவுகளும்தான்.

DLP வேண்டாம் என்று முடிவெடுத்து தொடர்ந்து தமிழ் வழி கல்வியிலேயே நிலைப்பவர்களை மட்டும் அது பாதிப்பதில்லை. டி எல் பி வேண்டும் என்று கோரும் பெற்றோருக்கும் அது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.

உதாரணமாக DLP வகுப்பு அமலாக்கத்தால் மாணவர்கள் அநீதியான முறையில் பிரிக்கப்பட்டு அபத்தமான ஏற்றத்தாழ்வுகளை எதிர்நோககிவருகிறார்கள். முன்பிருந்த PPSMI திட்டத்தைவிட இது மோசமானது.

கல்வி அமைச்சு, DLP திட்டமானது பெற்றோர்களின் தேர்வு என்று கூறுகிறது. ஆனால், அது பள்ளிகளில் பின்பற்றப்படுவதில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை DLP வகுப்பில் சேர்க்க நினைத்தாலும், பின்னணியில் இருந்து இறுதி முடிவு எடுப்பது பள்ளி நிர்வாகம்தான். எந்த எந்த மாணவரை DLP க்கு சேர்கலாம் யார் யாரை தவிர்க்கலாம் என்பதை மிக நாசுக்காக பள்ளி நிர்வாகம் முடிவு செய்கிறது. இதற்கு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வரையரையாக்கிக் கொள்கிறது. அதாவது, கெட்டிக்கார மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சுமாரான தேர்ச்சி அல்லது பின்தங்கிய மாணவர்களின் பெற்றோர் விரும்பினாலும், பள்ளி நிர்வாகம் தலையிட்டு அதை தடுத்துவிடுகிறது. இதற்கு அவர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் விளக்கம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வகுப்புகள் மட்டுமே தொடங்க முடியும் என்பதும், பின்தங்கிய மாணவர்களால் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் அறிவியல் கணித பாடங்களைப் பின்பற்ற முடியாது என்பதுமாகும்.

இந்த விளக்கங்கள் மேலோட்டமாக கேட்க நல்லவிதமாகத்தான் இருக்கும்.ஆனால், உண்மையில் மிகவும் அநீதியானவை என்பதை சொல்லவேண்டியுள்ளது.

இதுவரை அரசாங்கம் DLP வகுப்பு தொடங்க விதித்துள்ள நான்கு அடிப்படை விதிகள் எதிலும் மாணவர்களின் கல்வி தேர்ச்சி ஒரு கூறாகா குறிக்கப்படவில்லை. பெற்றோர் முடிவு மட்டுமே முக்கியம். ஆகவே எல்லாருக்குமானதாக கல்வி அமைச்சு சொல்லிக் கொள்ளும் DLPயைத் தமிழ்ப்பள்ளிகள் கெட்டிக்கார மாணவர்களுக்கு ‘மட்டுமான’ திட்டமாக மாற்றிவிட்டிருக்கிறது.

கெட்டிக்கார மாணவர்கள் ஆங்கிலம் வழியும் பின்தங்கிய மாணவர்கள் தமிழ் வழியும் அறிவியல் கணித பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதே இன்றைய DLP வகுப்பு நடைமுறையாக இருப்பது மிகப் பெரிய பாதகம். DLP கல்வியால்தான் எதிர்கால இந்திய சமூகத்தை காப்பாற்ற முடியும் என்று கூறுபவர்கள், ஏன் அதை ஒரு தரப்புக்கு தர மறுக்கிறார்கள்?. பின்தங்கிய மாணவரையும் டி எல் பி வகுப்பில் சேர்த்து ஆங்கிலம் வழி அவன் எதிர்காலத்துக்கு உத்திரவாதம் ஏற்படுத்த வேண்டியதுதானே முறை. ஆனால் அப்படி செய்ய மாட்டார்கள். காரணம் அது பள்ளி தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். மாணவனின் எதிர்கால நன்மையை பலிகொடுத்து பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை காப்பாற்ற வேண்டிய நிலை.

தமிழ்ப்பள்ளிகளில் இந்த பகுப்பு முறையின் நீட்சி, DLP வகுப்புகள் அறிவாளிகளின் இடமாகவும் தமிழ் வழி வகுப்புகள் ‘ஒதுக்கப்பட்டவர்களின்’ இடமாகவும் இயல்பாகவே அடையாளம் பெற்றுவிடும். அதோடு,
‘ஒதுக்கப்பட்டவர்கள்’ என்னதான் போராடி கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்தாலும் பிறகு, டி எல் பி வகுப்புக்குள் நுழையவும் முடியாது.

‘தமிழ்ப் பள்ளியே எங்கள் தேர்வு’ என்ற பரப்புரைகளைக் நம்பி தமிழ்ப்பள்ளிக்குத் தங்கள் பிள்ளையை அனுப்பிய பெற்றோர், DLP என்ற பெயரில், கண்ணுக்குத் தெரியாத தர முத்திரை ஒன்று தங்கள் பிள்ளைகளின் நெற்றியில் நிரந்தரமாக குத்தப்பட்டு விடுவதை உணரவேண்டிய காலம் இது.

 

எதிர்வினைகள் 

நித்யா,கோலாலம்பூர்

பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வது மிகவும் மோசமானது. மாணவர்களைப் புள்ளி விவரங்களாக மட்டுமே பாவிக்கும் தமிழ்ப்பள்ளி நிர்வாகங்களின் போக்கு DLPக்குப் பிறகு மட்டுமல்ல அதற்கு முன்பிலிருந்தே அப்படித்தான் இருக்கின்றது. கல்வி என்றால் என்ன? இந்த சிஸ்டம் எப்படி இயங்குகிறது? தேர்வு என்றால் என்ன ? அதில் தனது பங்கு என்ன ? இப்படி எதைப் பற்றியும் தெளிவு இல்லாத சிறு பிள்ளைகள், தங்களுக்கு மிகவும் அந்நியமான சூழலில், முதல் நாள் பள்ளிக்கு வரும்போதே பள்ளி நிர்வாகங்கள் தேர்வு வைத்து, மாணவர்களின் நெற்றியில் தர முத்திரையைக் குத்தி விடுகிறது. யார் பள்ளியின் புள்ளி விவரத்தை உயரத்த பயன்படுவர் என்று மாணவர்களை வடிகட்டியப் பின்புதான் இங்கே அவர்களுக்கான கல்வியே தொடங்கப்படும். (இந்த ஆண்டு என்ன நடந்தது என்று தெரியவில்லை. சென்ற ஆண்டு வரை தமிழ்ப்பள்ளிகளில் இப்படித்தான் நடந்தது). இதை இன்னும் உற்று நோக்கினால், கற்றல் குறைபாடு உள்ள, உடல், மன நலம் குன்றி இருப்பதால் கல்வியில் பின் தங்கக் கூடிய, மிக மோசமான சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட மாணவர்கள்தாம் இந்த முதல் நாள் தர நிர்ணயிப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியவர்களாக இருப்பார்கள். இந்த மாணவர்களை, ஏதோ உற்பத்தியில் ‘defect’ ஆன பொருள்கள் போல் பாவித்து வடிகட்டி இவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பில் போட்டு விடுவார்கள். 6 ஆண்டுகள் இதே சூழலில் கல்வி கற்கும் மாணவன் எத்தனை தாழ்வு மனப்பான்மையுடன் வளர்வான் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். DLP தொடங்கும் முன்பே மாணவர்களுக்கு இந்த நிலைதான். இன்று DLP தொடங்கிய பின்னும் இது தொடர்கிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தப் போகும் ஒரே பெரும் வாய்ப்பு எனக் குறிப்பிடப்படும் இத்திட்டமும் வழக்கம் போல் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டு பின்தங்கிய மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால் இங்கே என்னவாக இருந்தாலும் சரி its always about the school never about the pupils.

 

மனோகரன்,கெடா 

இப்போது செய்யப்பட வேண்டியது தனியார் அமைப்புகள் பள்ளிகளில் இறங்கி டி எல் பியால் உண்டாகும் பாகுபாட்டினால் மாணவர்கள் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் தாழ்வுணர்ச்சியின் சிக்கல்களைதான். அதற்கான கணக்கெடுப்பும் அதை ஒட்டிய ஆய்வும் இருந்தால் மட்டுமே பெற்றோர்களுக்கு தெளிவு பிறக்கும்.