இடைநிலைப்பள்ளி வரலாறு பாடப்புத்தகத்தில் கடாரமும் ராஜ ராஜா சோழனும் எங்கே?

இடைநிலைப் பள்ளியில் புதிய பதிப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் வரலாறு புத்தகத்தில் கடாரமும்,ராஜ ராஜ சோழனின் தடம் குறித்தும் சரித்திரப் பூர்வமாக தெளிவாகச் சொல்லப்படவில்லை என்று பாட ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

 

மலாய்க்காரர்கள் உலகம் ( ALAM MELAYU BAB1) எனும் தலைப்பில் முதல் பாடத்தில், சரித்திரத் தகவல்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை என்று தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் சுப்பிரமணியம்( புனைப் பெயர்) தமிழ் மலரிடம் தெரிவித்தார்.

சரித்திரத்தில் தோன்றியிருக்கும் ஒரு ஆட்சி குறித்தோ, இடம் குறித்தோ கற்றுத் தரும் போது அது தோன்றுவதற்கு முன் இருந்த காலக்கட்டத்தை நாம் தெரிந்திருக்க வேண்டும். பின்னணி இல்லாத சரித்திரம் முழுமைபெறாது. கடாரம் தலைப்பில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களில் நுணிப்புல் மேய்ந்து காட்டப்பட்டிருக்கிறது. அதன் சரித்திரப் பின்னணியில் உள்ள பல கூறுகள்  காட்டப்படவில்லை. கடாரம் வென்ற சோழனை பாடப்புத்தகத்தில் ஓரங்கட்டிவிட்டனர் என்று அந்த ஆசிரியர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.அங்கு ஆட்சி புரிந்தர்வர்கள் யாவர், பொருளாதாரம் ,கலாச்சார, பண்பாட்டு  நடவடிக்கைகள் என்னவாக இருந்தது? போன்ற பின்புலன்கள் பிண்ணுக்குத் தள்ளப்பட்டு உள்ளன என்று அவர் கூறினார். இந்தியாவுக்கும் நமது நாட்டிற்கும் ஏற்பட்ட சரித்திர தொடர்புகள் குறித்து இங்கே அதிகம் பேசப்படவில்லை. வரலாற்றை மறைத்து, மலாய் மேலாண்மையை புகுத்தும் நோக்கத்தில்  பாடப்  புத்தகத்தை வடித்தவர்களின்  செயல்பாடு இருக்குமோ என்ற சந்தேகம் கிளம்புகிறது என்கிறார் ஆசிரியர்.

 

ராஜேந்திர சோழனின் தாக்குதல்களைக் காட்டும் வரைபடம்

மலாய்க்காரர் ஆசிரியருக்கு இந்த வரலாற்று பிழையில் அக்கறையோ அல்லது இது பிழை என்று எடுத்துச் சொல்ல தேவையோ இருக்காது. ஆனால் இதுநாள் வரை உண்மை வரலாற்றை சொல்லிக் கொடுத்து வந்த ஆசிரியருக்கு இதுபோன்ற சூழ்ச்சி தகவல்கள் அவர்களுக்கு அதிருப்தியைத் தரலாம்.இன்றைய கல்வி சூழலில் வரலாறு கற்றுத் தரும் இந்திய ஆசிரியர்கள் எத்தனைப்பேர்? வரலாறு பாடத்திற்கான ஆசிரியர் பயிற்சிக்கு இந்திய ஆசிரியர்களைக் காண முடிவதில்லை. அப்பாடத்தின் தேர்வுக் குழுவிலும் இந்திய ஆசிரியர்கள் காணப்படுவதில்லை. இந்த நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கல்விச் சூழலில் தெளிவாகப் பேசப்படாத சரித்திரக் கல்வியைக் கற்கும் நமது புதிய தலைமுறைக்கு உண்மையான வரலாறு தெரியாமலேயே போய்விடும் ஆபத்து இருப்பதாக சுப்பிரமணியம் கூறினார்.ஆகவே, கல்வி அமைச்சில் இருக்கும் பொறுப்பான கல்விமான்கள் இந்தப் பிரச்சினையை உற்று கவனிக்க வேண்டும் என்று சுப்ரா வலியுறுத்தினார்.

 

-இரா.சரவண தீர்த்தா