‘ஸ்மாட் வீல்’: புரோட்டோன் ஐரிஸ் காரை வென்றார் திவாகர் சிவா

 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி-யில் ஒளியேறிய ‘ஸ்மாட் வீல்’ போட்டியின் இறுதிச் சுற்றின் அத்தியாயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-ஆம் தேதி அலைவரிசை 231-இல் ஒளியேறியது.

இப்போட்டியில் திவாகர் சிவா மிகச் சிறப்பாக விளையாடி புரோட்டோன் ஐரிஸ் காரையும் ரொக்கப் பரிசும் தட்டிச் சென்றார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்ற இப்போட்டியில் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியைச் சேர்ந்த மொத்தம் 16 போட்டியாளர்கள் களமிறங்கினார்.


அறிவிப்பாளர் இர்பான் ஜயினி தொகுத்து வழங்கிய இப்போட்டியில் ஆரம்பக்கட்ட சுற்று முதல் அரையிறுதிச் சுற்று வரை அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லும் இரு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வகையில், அரையிறுதிச் சுற்றில் வென்ற சதீஷ்வரி செல்வராஜ் மற்றும் திவாகர் சிவா இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகினர்.

சவால்மிக்க இறுதிச் சுற்றில் கேட்கப்பட்ட பொது அறிவு மற்றும் நுண்ணறிவு (intelligence quotient) கேள்விகளுக்குச் சரியான பதில்களைச் சொன்ன திவாகர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் தற்போது மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் இளங்கலைக் கல்வியை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.